கஸ்தூரி தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கவில்லை- நீதிமன்றம்
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு பேசிய விவகாரம் தொடர்பான வழக்கில் போலீஸ் கைதுக்கு பயந்து தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரி, தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளைகள் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கஸ்தூரி பேசிய பென் டிரைவ் நீதிபதியிடம் வழங்கப்பட்டது. பின்னர் நீதிபதி கூறுகையில், தெலுங்கர்கள் தமிழகத்திற்கு வந்தவர்கள் கிடையாது. அவர்களும் தமிழகத்தின் ஒரு பகுதி தான். தற்போது வடசென்னையில் அதிகமாக தெலுங்கர்கள் வசித்து வருகின்றனர். சென்னையின் முழு உருவாக்கமே தெலுங்கு சமூக மக்கள்தான் அவர்களை எவ்வாறு பிரித்து பேச முடியும். என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
‘இதனையடுத்து அரசுத்தரப்பில், " குறிப்பிட்ட சமூக பெண்களின் மாண்பை குலைக்கும் வகையில் கஸ்தூரி அவதூறு கருத்து தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட சமூகத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் இது போன்ற கருத்தை தெரிவித்துள்ளார். இது சாதிய மோதல்களுக்கு வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ளது. இது தமிழகம் வந்த தெலுங்கு சமூக மக்களை மிகவும் புண்படுத்தியுள்ளது" என தெரிவித்தார். அதற்கு நீதிபதி, "தெலுங்கு மக்கள் வந்தவர்கள் அல்ல. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தின் ஒருபகுதியானவர்கள்" என குறிப்பிட்டார். தொடர்ந்து அரசுத்தரப்பில், " கஸ்தூரி திட்டமிட்டு இது போன்ற கருத்தை பேசியுள்ளார். மன்னிப்பு கோரிவிட்டால் வருத்தம் சரியாகிவிடாது. ஆகவே கஸ்தூரிக்கு முன் ஜாமின் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது. நீதிபதி, இது தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு அரசுத்தரப்பில் 6 வழக்குகள் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், "குறிப்பிட்ட சமூகத்தினரைக் கொண்டு மட்டும் 3ஆம் தேதி கூட்டம் நடைபெறவில்லை." என தெரிவிக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் இருந்து இந்த வீடியோவை நீக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, கஸ்தூரி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டதைத் தொடர்ந்து நீதிபதி வழக்கை 03.30. மணிக்கு ஒத்திவைத்தார். பின்னர் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தெலுங்கு சமூக பெண்கள் அந்தப்புரத்திற்காக வந்தவர்கள் என கஸ்தூரி குறிப்பிட்டு ஏன் கூறினார்? அதற்கான அவசியம் என்ன? நடிகை கஸ்தூரி தன்னை கல்வியறிவு பெற்றவர், சமூக ஆர்வலர் ,அரசியல் வாதி ,என தன்னை கூறும் மனுதாரர் எப்படி இப்படி கருத்தை தெரிவிக்கலாம்? என நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு கஸ்தூரி தரப்பில் , " தெலுங்கு மக்கள் அனைவரையும் குறிப்பிட்டு அத்தகைய கருத்து தெரிவிக்கப்படவில்லை. சில குறிப்பிட்ட தனிநபர்கள் குறித்தே கருத்தை தெரிவித்துள்ளார். ஆனால் மன்னிப்பு கோரியும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அரசியல் நோக்கத்தோடு இந்த விசயம் கையாளப்பட்டுள்ளது. பேசிய வீடியோவும், மன்னிப்பு கோரியதும் சமூக வலைதளத்தில் உள்ளது. கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டிய அவசியம் என்ன?" என வாதிட்டார். அதற்கு நீதிபதி, " குறிப்பிட்ட சமூக பெண்கள் அந்தப்புரத்திற்காக வந்தவர்கள் என குறிப்பிட்டு ஏன் கூறினார்? அதற்கான அவசியம் என்ன? என கேள்வி எழுப்பினார். அதற்கு கஸ்தூரி தரப்பில், "தவறு செய்ததற்காகக் மன்னிப்பு கோரியுள்ளார். அதற்காக அவரை காவல்துறையினர் கைது செய்ய வேண்டிய தேவை இல்லை" என தெரிவித்தார். அதற்கு நீதிபதி, "அவர் பேசியது தேவையற்றது. கற்றவர், சமூக ஆர்வலர் என தன்னை கூறும் மனுதாரர் எப்படி இப்படி கருத்தை தெரிவிக்கலாம்? அந்த வீடியோக்களை பார்க்கையில் அது தேவையற்ற விளைவை ஏற்படுத்தும்தானே? மன்னிப்பு அதை உணர்ந்ததாக தெரியவில்லை. கூறியதை நியாயப்படுத்த விரும்புவதாக உள்ளது" என குறிப்பிட்டார்.
அரசுத்தரப்பில், "மனுதாரருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அண்டை மாநிலங்களுக்கிடையே பிரச்சனை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு பேசியுள்ளார். தெலுங்கு பேசும் நட்பு மாநில திருப்பதி கோவிலுக்கு 40% தமிழ் பக்தர்கள் சென்று வரும் சூழலில், மனுதாரரின் பேச்சு சரியானது அல்ல. அந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களின் சிந்தனை ஒன்றே. இது போன்ற சம்பவங்களை இப்படியே விட்டால், அது பிறரை ஊக்குவிப்பதைப் போல் அமைந்துவிடும். ஆகவே, அவருக்கு முன் ஜாமின் வழங்கக்கூடாது" என தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டார்.