தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி கைது
தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கான ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அப்போது அவர் தெலுங்கு பேசும் மக்களை கடுமையாக விமர்சனம் செய்தார்.நடிகை கஸ்தூரியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து மறுநாளே பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி, இதற்காக மன்னிப்பும் கோரினார். இருப்பினும் கூட நடிகை கஸ்தூரிக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகக்கோரி கஸ்தூரிக்கு போலீசார் சம்மன் வழங்க சென்றபோது முன்னதாகவே அவர் தனது வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவானார். செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதால் நடிகை கஸ்தூரியை போலீசார் தீவிரமாக தேடினர். தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே வழக்கில் போலீஸ் கைதுக்கு பயந்து தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஹைதராபாத்தில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.