ரஜினி சார் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்- விஜய்
நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், இந்தப் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், இரவு 10.30 மணிக்கு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் செரிமான பிரச்சனை காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே சிகிச்சை பெற்றிருந்த நிலையில் தற்போது மீண்டும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. நேற்று இரவு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், ரஜினியின் இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் இருந்த வீக்கம், அறுவை சிகிச்சை இல்லாமல் Trancatheter முறையில் வெற்றிகரமாக சரி செய்யப்பட்டுள்ளதாகவும், நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார், 2 நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் சார் அவர்கள் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.