365 ரூபாய்ல படிப்பை முடிச்சிட்டேன்.. ஆனா இப்போ கார்த்தி பையனை ஸ்கூல்ல சேர்க்க 2.5 லட்சம் கேக்குறாங்க’ - நடிகர் சிவக்குமார்
365 ரூபாய்ல என் படிப்பை முடிச்சிட்டேன்.. ஆனா இப்போ கார்த்தி மகனை பள்ளியில் சேர்க்க 2.5 லட்சம் கேட்கிறார்கள் என நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் ஸ்ரீ சிவக்குமார் கல்வி அறகட்டளை 45-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் அகரம் அறக்கட்டளை சார்பாக 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று முதல் தலைமுறையாகக் கல்லூரி செல்லும் விளிம்பு நிலை குடும்பங்களைச் சேர்ந்த 26 மாணவர்களுக்கு தலா ரூ. 10,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதில் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி மற்றும் பேராசிரியர் கல்விமணி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினர்.
மேலும், பின்தங்கிய கிராமங்களில் சிறப்பாகப் பணியாற்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன் மூத்த ஓவிய கலைஞர் மாயா என்கிற G.R மகாதேவனின் பணிகளை பாராட்டி அவருக்கு ரூ. 1,00,000ம், பின்தங்கிய சமூக மாணவர்களுக்கு இலவச கல்வியை வழங்கி வரும் திண்டிவனம் தாய் தமிழ் பள்ளிக்கு ரூ. 1,00,000ம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவக்குமார், “இங்குள்ள மாணவர்கள் நீங்கள் என்னைத்தான் முன்னுதாரணமாக எடுத்துகொள்ள வேண்டும். சூர்யா, கார்த்தி இருவரும் சிவகுமார் என்ற நடிகனின் பிள்ளைகள். ஆனால் நான் ஏழைத்தாயின் மகன். அப்படி தான் கஷ்டப்பட்டு படித்தேன். நான் பிறந்தபோதே அப்பா இல்லை, மறைந்துவிட்டார். நாங்கள் சாப்பிட அவ்வளவு கஷ்டப்பட்டோம். வெறும் சோளம் தான். பஞ்சம் போன்ற காலங்களில் அதுவும் கிடையாது. ஒட்டகம் பால் பவுடர் எடுத்துக்கொண்டுள்ளேன். பொங்கல் சோறு போட முடியாமல் என்னை ஏன் பெற்றாய்? என்று என் அம்மாவிடம் கேட்டுள்ளேன்.
365 ரூபாயில் பள்ளிக் கல்வியை முடித்துவிட்டேன். ஆனால் இப்போது கார்த்தி மகனை பள்ளியில் Pre.KG சேர்க்க ரூ.2.5 லட்சம் கேக்குறாங்க. 5 ரூபயால் அப்போது என்னால் பள்ளி மாணவர்களுடன் குழு புகைப்படம் எடுக்க முடியவில்லை. அதனால் 50 ஆண்டுகளாக குழுப் புகைப்படத்தை நான் பார்ப்பதே இல்லை. ஆனால் இப்போது 5 கோடி புகைப்படங்களில் என்னுடைய முகம் உள்ளது. ஆனால் அன்று ஐந்து ரூபாய் கொடுத்து குழுப் புகைப்படம் எடுக்க முடியவில்லை. இங்குள்ள மாணவர்கள் நாம் அனைவரும் ஒரே ரத்தம். நாம் முயற்சித்தால் இமயமலையையே தொட முடியும். கல்வியும் ஒழுக்கமும் தான் நம்மை இமயத்தில் ஏற்றும்.” என்று பேசினார்..