"ரேஷன் கடைகளில் தக்காளியை விற்க நடவடிக்கை" - கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்!!

 
tomato

ரேஷன் கடைகளில் தக்காளியை விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகம் ,கர்நாடகா , ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தக்காளியின் வரத்து குறைந்து, அதன் விலை உயர்ந்துள்ளது. இதனால் கடந்த 15 நாட்களாக காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது.  குறிப்பாக தக்காளியின் விலை கிலோ 160 என விற்பனையாகி வருகிறது.

tomato

தமிழகத்தில் பருவமழை காரணமாக காய்கறிகளின் குறிப்பாக தக்காளியின் விலை உயர்வை கட்டுப்படுத்தி மக்களுக்கு மலிவு விலையில் தரமான காய்கறிகள் மற்றும் தக்காளி கிடைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒரு கிலோ தக்காளி ரூபாய் 160க்கு மேல் விற்பனை செய்யப்படும் நிலையில் ரேஷன் கடைகளில் தக்காளியை விற்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில்  16 வகை காய்கறிகளையும் ரேஷன் கடைகளில் விற்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

ration

கூட்டுறவு துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி கிலோ 75 முதல் 100 வரை குறைவான விலையில் தரமாக மக்களுக்கு விற்பனை செய்ய முதற்கட்டமாக நாளொன்றுக்கு 15 டன் தக்காளி மற்றும் இதர காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  நேற்று மதியம் வரை தோராயமாக 8 டன் தக்காளி மற்றும் இதர காய்கறிகள் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் பொது மக்களுக்கு வெளிச் சந்தை விலையைவிட குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது.

tomato

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள நகர்ப்புறம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட நியாய விலைக்கு கடைகளிலும் காய்கறி மற்றும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் மக்களுக்கு,  காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  அரசின் இந்த நடவடிக்கையால் நேற்றுவரை வெளிச்சந்தையில் தக்காளி ஒரு கிலோ 150க்கு என்று விற்கப்பட்ட நிலையில் தற்போது கிலோ 90 முதல் 100 வரை விற்பனையாகி வருகிறது.  அத்துடன் இதர காய்கறிகளின் விலையும் வெளிச்சந்தையில் கணிசமாக குறைந்துள்ளது.