மதுரை கள்ளழகர் கோயிலில் ஆடி பெரும் திருவிழா : கோலாகலமாக நடைபெறும் தேரோட்டம்..
மதுரை அழகர் கோவிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் கள்ளழகர் திருக்கோவிலில் ஆடிப்பெரும் திருவிழாவானது கடந்த 13ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. கோவிலில் உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கிய நிலையில், தொடர்ந்து சுந்தர ராஜ பெருமாள், கருடன், அம்மன் ஆகியோர் தங்க குதிரை, சிம்ம வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை வேளையில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். ஆடி பௌர்ணமி தினம் மற்றும் ஆடித் திருவிழாவின் 9ம் நாளான இன்று விழாவின் முக்கிய நிகழ்வான திருத் தேரோட்டம் நடைபெறுகிறது.
அதன்படி சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் காலை 5:30 மணி முதல் 60 அடி உயரம் கொண்ட திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்து 4 ரத வீதிகளில் வலம் வந்தனர். இந்த நிகழ்ச்சியில் தென் மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை படம் பிடித்து இழுத்து , சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 108 வைணவ திருத்தலங்களில் மிக முக்கிய தளமாக விளங்கும் கள்ளழகர் திருத்தலத்தில், சித்திரை மாதம் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை தொடர்ந்து ஆடி மாதத்தில் நடைபெறும் இந்த திருவிழாவும் முக்கிய விழாவாக பார்க்கப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருப்பதால், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்