சாலையில் தோண்டபட்ட பள்ளத்தில் விழுந்து இளைஞர் பலி
கோவை தீத்திபாளையம் அருகே மேம்பால பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் தேவராயபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (36). இவர் தனியார் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் நிறுவனத்தில் மண்டல அலுவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கார்த்திகேயன் அலுவலகப் பணிக்காக பெங்களூரு சென்ற நிலையில், இன்று அதிகாலை ரயில் மூலம் கோவை வந்தார். பின்னர் கோவை ரயில் நிலையத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் தேவராயபுரம் நோக்கி சென்றார். அப்போது பேரூர் அடுத்த தீத்திபாளையம் சாலையில் வந்த போது அங்கு மேம்பால பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் இருப்பது தெரியாமல் சென்ற கார்த்திகேயன் இருசக்கர வாகனத்துடன் பள்ளத்தில் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் பேரூர் போலீசுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேம்பால பணிக்காக சாலை நடுவே பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் அதன் அருகே அறிவிப்பு பலகையோ, தடுப்புகளோ அமைக்காததால் விபத்து ஏற்பட்ட நிலையில், அவசரகதியில் நெடுஞ்சாலை துறையினர் அப்பள்ளத்தை மூடும் பணியில் ஈடுபட்டனர் உரிய முறையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.