திருப்பதிக்கு குடும்பத்துடன் வந்த இளைஞர்! திருமணமாகாத விரக்தியில் மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை
திருமணம் ஆகாத விரக்தியில் மதுரை சேர்ந்த இளைஞர் திருப்பதியில் 60 அடி உயர மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி கபிலதீர்த்தம் பகுதியில் இருந்து திருச்சானூர் வரை அமைக்கப்பட்டுள்ள கருட மேம்பாலத்தில் மாநகராட்சி பூங்கா அருகே இளைஞர் ஒருவர் 60 அடி உயர பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருப்பதி அலிபிரி போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை மீட்டு திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இறந்தவர் மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் எஸ். பாண்டிய ராஜன் (31) என்பது தெரிய வந்தது.
டைலர் வேலை செய்து வந்த பாண்டிய ராஜன், திருமணம் ஆகாததால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். நேற்று தனது குடும்பத்தினருடன் ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் குடும்பத்தினரை ரயிலில் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து தான் பேருந்தில் வருவதாக அவர்களிடம் தெரிவித்தார். இந்த நிலையில் இன்று காலை அவர் கருட மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்த போலீசார் அவர்கள் வந்த பிறகு, வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்


