ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த பெண்... வீடியோ எடுத்து தகாத உறவுக்கு அழைத்த கும்பல்
திருவெண்ணெய்நல்லூர் அருகே தனிமையில் ஆண் நண்பருடன் இருந்த பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கணவரை இழந்த ஒரு பெண் தனது உறவினர் ஒருவருடன் நேற்று மாலை ஒரு கிராமத்தின் அருகில் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதை நோட்டமிட்ட திருவெண்ணெய்நல்லூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த இரு நபர்கள் தனிமையில் இருந்ததை வீடியோ பதிவிட்டதாக கூறப்படுகிறது. வீடியோவில் பதிவு செய்த காட்சியை இருவரிடம் காண்பித்து ஆயிரம் ரூபாய் பணம் பறித்த நிலையில் மீண்டும் அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியதாகவும் நாங்கள் கூப்பிடும் போது தகாத உறவிற்கு வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பயந்து போன அந்தப் பெண்மணி திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (25) மற்றும் திலீபன் (24) ஆகிய இருவரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தனிமையில் இருந்த பெண்ணை வீடியோ எடுத்து விரட்டி பணம் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.