கார் ஓட்டி பழகிய போது நடந்த விபரீதம்- திடீரென வாய்க்காலுக்குள் பாய்ந்த கார்
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கல்லூரி மாணவன் புதிதாக காரை ஓட்டி பழகியபோது எதிர்பாராத விதமாக நீர் பாசன வாய்க்காலில் கவிழ்ந்து கார் விபத்துக்குள்ளானது.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கத்தேரி ஊராட்சி சாமியம்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் மகன் மேகவர்ணன் (20). இவர் சேலம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் இவர் இன்று மாலை தனது தந்தையின் காரை ஓட்டி பழகுவதற்காக வீட்டின் அருகே உள்ள சாமியாம்பாளையம் நீர் பாசன வாய்க்கால் கரையில் சென்றபோது எதிர்பாராத விதமாக கார் நீர்ப்பாசன வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கல்லூரி மாணவனை பத்திரமாக மீட்டெடுத்தனர். இதனால் கல்லூரி மாணவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
நீர் பாசன வாய்க்காலில் இறங்கிய காரை கிரேன் மூலம் மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது போன்ற விபத்துகளை தவிர்க்க பெற்றோர்கள் பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இரு சக்கர வாகனம் மற்றும் கார்களை ஓட்டிப் பழக அனுமதிக்கூடாது என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.