பாஜகவுடன் கள்ள கூட்டணி வைக்க வேண்டிய அவசியமில்லை- ஆ.ராசா
பாஜகவுடன் கள்ள கூட்டணி வைக்க வேண்டிய அவசியமில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக எம்பி ஆ.ராசா பதிலடி கொடுத்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். கடந்த 2015-ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆ.ராசா மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. ஆ.ராசா உள்ளிட்டோருக்கு வழக்கு ஆவணங்களை வழங்க ஆணையிட்ட நீதிமன்றம், செப்டம்பர் 18-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
அதன்பின் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி ஆ.ராசா, “அதிமுகவை போல பாஜகவுடன் கள்ளக் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நினைவு நாணயங்களை வெளியிடுவதே ஒன்றிய அரசுதான், அப்படி இருக்கும் போது ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பதில் என்ன தவறு? திமுக மீது பழிப்போட்டு திசை திருப்ப நினைக்கும் எடப்பாடி பழனிசாமியின் நாடகத்தை பொதுமக்கள் நம்ப மாட்டார்கள்.
கலைஞரின் உருவம் பொறித்த நாணயத்தில் இந்தி எழுத்து ஏன் இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கேட்பதால் அவருக்கு என்ன ஆச்சு என்ற கவலை மேலும் அதிகரிக்கிறது. இந்தியாவில் உள்ள நாணயங்கள் எதுவாக இருந்தாலும் அதில் ஆங்கிலமும் இந்தியும் இருப்பது வழக்கம். கலைஞருக்காக வெளியிடப்பட்டுள்ள நாணயத்தில் தமிழ் வெல்லும் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது.” என்றார்.