சாமி கும்பிடுவது போல நடித்து காளி கழுத்தில் இருந்த தங்க தாலியை திருடி சென்ற நபர்

 
கோவில்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கோவிலில் அம்மனின் இரண்டரை பவுன் தாலி சங்கிலியை திருடிய வாலிபரை சிசிடிவியில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள இனாம்கல் பாளையம் கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த ஜூலை 8 தேதி அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த இரண்டரை பவுன் தாலி சங்கிலி திருட்டு போனது. இதுகுறித்து கோவில் பூசாரி பரமேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியை ஆய்வு செய்து அதில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் நகையை திருடிய ஆசாமியை மணச்சநல்லூர் போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் போலீசார் மண்ணச்சநல்லூர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த கரூர் அருகே உள்ள பசுபதிபாளையத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் (38) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அம்மன் கழுத்தில் கிடந்த நகையை திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் இவர் மீது திருச்சி, கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள காவல் நிலையத்தில் 15க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன மேலும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தொட்டியம் பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டு சிறைக்கு சென்று வந்ததும் தெரிய வந்தது.


இதனையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது சிவசுப்பிரமணியன் கோவிலில் திருடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.