முதலாளிக்கு தூக்க மாத்திரை கொடுத்து ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்த வேலைக்காரி

 
arrested

சென்னை வேளச்சேரியில் முதலாளிக்கு உணவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து 2 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வேலைக்காரி கைது செய்யப்பட்டார்.

7 Types of Arizona Theft Explained - Feldman | Royle

வேளச்சேரி காந்தி சாலையை சேர்ந்தவர் மனோகரன் (வயது 60). தோல் பை, பெல்ட் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவரது மகன் சந்தோஷ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களது குடும்பத்தினர் சில தினங்களுக்கு முன் வெளியூர் சென்றுவிட்டனர். வீட்டில் மனோகரனும் அவரது தாயார் பேபி அம்மாள்(78) என்பவரும்  மட்டும் இருந்துள்ளனர்.

வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு வந்த சந்தோஷ், வெளிப்புறமாக கதவு பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார், உள்ளே சென்று பார்த்தபோது, அவரது தந்தை மனோகரன், பாட்டி பேபியம்மாள் ஆகியோர் மயங்கி கிடந்தனர். பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்த 2.30 லட்சம் பணத்தையும் காணவில்லை.

இதுதொடர்பாக சந்தோஷ் அளித்த புகாரின் பேரில் வேளச்சேரி போலீசார் விசாரணையை தொடங்கினர். அதில் இவர்களது வீட்டில் 3 வருடங்களாக வேலை செய்யும் விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த சுப்பம்மாள் என்பவரே பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் சில தினங்களுக்கு முன்பு மனோகரனிடம் கடன் கேட்டதாகவும், அவர் தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்ததாகவும் தெரிகிறது. ஆனால் பீரோவில் பணம் இருப்பதை அறிந்து வைத்திருந்த சுப்பம்மாள், ரசத்தில் தூக்க மாத்திரையை கலந்து மனோகரனுக்கும், பேபியம்மாளுக்கும் கொடுத்துவிட்டு திருடி சென்றுள்ளார்.

சுப்பம்மாளை கைதுசெய்த போலீசார், அவரிடமிருந்து ரூ.2.30  லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.