பள்ளி மாணவியிடம் தவறாக நடந்துகொண்டவரை அடித்தே கொன்ற உறவினர்கள்

 
death

திருவள்ளூர் அருகே பேருந்தில் ஏற முயன்ற போது  பள்ளி மாணவியிடம்  தவறாக நடந்துக் கொண்டதாக கூறி 50 வயதுடைய நபரை மாணவியின் உறவினர்கள்  தாக்கியதில் அவர் உயிரிழந்தார். 

திருவள்ளூர் மாவட்டம் அரண்வாயல் குப்பம் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தியுன் மகள்  மணவாளநகரில் உள்ள நடேசன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் 12  வகுப்பு படித்து வருகிறார். மாணவி கடந்த ஒன்றாம் தேதி மாலை பள்ளி நேரம் முடிந்து வீட்டிற்கு செல்ல ஒண்டிக்குப்பம் பேருந்து நிறுத்தத்திலிருந்து அரசு பேருந்தில் ஏற முயன்றுள்ளார். அதே பேருந்து நிறுத்தத்தில் மணவாளகர் அடுத்த கற்குழி பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன், அவருடைய மனைவி கற்பகம் உடன் பூந்தமல்லியில் தனியார் மருத்துவமனையில் விபத்து ஏற்பட்டு  சிகிச்சை பெற்று வரும் அவர் மகனை பார்க்க அந்தப் பேருந்தில் ஏற முயன்றுள்ளனர். மாணவியின் பின்னால் பேருந்து படியில் ஏற முயன்றபோது குடிபோதையில் இருந்த ஸ்டீபன் அந்த மாணவியிடம் தவறாக நடந்துக் கொண்டதாக  கூறி மாணவி அவர் தந்தை சுந்தரமூர்த்திக்கு தொலைபேசியில் தகவல் அளித்துள்ளார்.

அப்போது அங்கு வந்த அவருடைய தந்தை சுந்தரமூர்த்தி அவருடைய உறவினர்கள்  ஜெகன்,லோகேஷ் ஆகிய மூவர் இணைந்து ஸ்டீபனை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றனர். இதில் படுகாயம் அடைந்த ஸ்டீபன் திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்திருந்தார். இது குறித்து ஸ்டீபனின் மனைவி கற்பகம்  மணவாள நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், கொலை முயற்சி  உள்ளிட்ட 4 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்த  காவல் துறையினர் மாணவியின் தந்தை சுந்தரமூர்த்தி, ஜெகன், லோகேஷ் ஆகிய மூவரை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி  புழல் மத்திய  சிறையில் அடைத்தனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஸ்டீபன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து மூவர் மீது கொலை முயற்சியானது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு மாற்றப்பட்டுள்ளது.