சிவகாசி அருகே பட்டாசு வெடித்து பயங்கர விபத்து

 
தீவிபத்து

சிவகாசி கிழக்கு காவல்நிலையம் அருகே லாரி டிரான்ஸ்போர்ட் குடோனில் பட்டாசுகள் வெடித்து சிதறி பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் மேட்டூ ரை தலைமையிடமாகக் கொண்ட தனியார் லாரி செட் நிறுவனம், தமிழகத்தின் முக்கிய பெரு நகரங்களில் பல்வேறு ஏஜெண்டுகளை பணியமர்த்தி கிளைகள் அமைத்து, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் கண்டெய்னர் போன்ற லாரி வாகனங்கள் மூலமாக அனைத்து வகையான பார்சல்கள் மற்றும் பண்டல்களையும் அனுப்பி வருகின்றனர். அதே போன்று தொழில் நகரமான சிவகாசியிலும் நகர்ப்புறம் மற்றும் கிராமபகுதிகளின் பல இடங்களில் லாரி செட் நிறுவன கிளைகளை அமைத்து ஆங்காங்கே பணியாளர்களை பணி யமர்த்தி வெளியூர்களுக்கு பார்சல்களை அனுப்பி வருவதுடன், சிவகாசியிலிருந்து சாத்தூர் செல்லும்  சாலையிலுள்ள சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தை அடுத்த மைதானத்தில் தகர செட்டுகள் அமைத்து எல்லா வகையான பார்சல் பண்டல்களையும் இருப்பு வைத்து அன்றாடம் வாகனங்களில் ஏற்றி வெளியூர்களுக்கு அனுப்பி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். 


தற்போது தீபாவளி நெருங்கி வருவதை முன்னிட்டு வெளி மாநிலங்களுக்கும், வெளியூர்களுக்கும் பட்டாசு பண்டல்களை விற்பனைக்காக அனுப்பி வைக்கும் பணி மும்மரமாக நடந்து வருவதால் தகர செட் கிட்டங்கியில் பட்டாசு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளும், பட்டாசு கடைகளிலிருந்து பட்டாசு பண்டல்களும், வாகனங்கள் மூலமாக எடுத்து வரப்பட்டு ஆயிரக்கணக்கான பட்டாசு பண்டல்கள் தகர செட் கிட்டங்கியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென பட்டாசுகள் வெடித்து சிதற ஆரம்பித்தன. வெடித்து சிதறிய பட்டாசுகளிலிருந்து பற்றிய தீ மளமள வென பரவி அனைத்து பட்டாசு பண்டல்களும் எரிந்து தீக்கிரையாகின. விபத்து குறித்து தகவலறிந்த சிவகாசி, விருதுநகர், சாத்தூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களிலிருந்து 6-  தீயணைப்பு வாகனங்கள் மூலமாக, 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கடும் சிரமத்திற் கிடையே நீண்ட நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

தீ விபத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சிவகாசி கிழக்கு பகுதி போலீசார், வாகனத்திலிருந்து பட்டாசு பண்டல்களை ஏற்றி-இறக்கும் போது உராய்வு காரணமாக விபத்து ஏற்பட்டதா? கடும் வெயில் காரணமாக உஷ்ணம் கூடி காற்று புக முடியாத தகர செட்டுகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டாசுபண்டல்களில்  சூடேறி தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மின் கசிவு காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ  விபத்து நடந்தவுடன் அங்கு பணியிலிருந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்பட 20 பேர் தப்பி ஓடியதால், யாருக்கும் எந்தவிதமான காயமும், உயிரிழப்போ இன்றி பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இருந்த போதிலும் தீ விபத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான அனைத்து வகையான பட்டாசுகளும் தீயில் எ ரிந்து சேதமடைந்தன.