போலி மருத்துவரின் சிகிச்சையால் மயங்கி விழுந்து உயிரிழந்த 22 வயது இளைஞர்

 
fff

சிதம்பரத்தில் போலி மருத்துவரின் சிகிச்சையால் 22 வயது இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சிதம்பரம் அருகே உள்ள மேலத்திருக்கழிப்பாலை கிராமத்தைச் சேர்ந்தவர் மாயவன் மகன் கவிமணி(22). இவர் உடல் நலக்குறைவு காரணமாக சிதம்பரம் நகரில் உள்ள மந்தகரை என்ற இடத்தில் உள்ள ஒரு கிளினிக்கிற்கு சென்றார். அப்போது அங்கிருந்த சரவணன் என்கிற தளபதி ராஜா கவிமணிக்கு ஊசி போட்டு, மாத்திரை கொடுத்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் வீட்டிற்கு சென்ற கவிமணிக்கு மீண்டும் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கவிமணியின் தாயார் கவிதா அளித்த புகாரின்பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து போலி டாக்டரான சிதம்பரம் பொன்னம்பலம் நகரைச் சேர்ந்த சரவணன் என்கிற தளபதிராஜாவை கைது செய்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட போலி டாக்டரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரியும், அவரது மருத்துவமனையை மூடி சீல் வைக்கக் கோரியும், உயிரிழந்த கவிமணி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணாமலைநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கவிமணியின் உடல் வைக்கப்பட்ட சவக்கடங்கு முன்பு கவிமணியின் உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.