11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில் 12ம் வகுப்பு மாணவன் பலி! தஞ்சையில் சோகம்

 
a a

பட்டீஸ்வரம் அறிஞர் அண்ணா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில் 12ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார்.

கும்பகோணம் அருகில் உள்ள பட்டீஸ்வரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ வகுப்பு படித்து வந்த கவியரசன் என்ற மாணவன் (17) மற்றும் இவரது நண்பர்கள் மூவர் சேர்ந்து மூன்று மாதத்திற்கு முன் இதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவனை தாக்கி உள்ளனர். அம்மாணவனுக்கு மூக்கு உடைந்த நிலையில் நான்கு மாணவர்களும் சேர்ந்து அப்போது பாதிக்கப்பட்ட மாணவனுக்கு நிதி உதவி அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த சம்பவம் தொடர்பாக மேல் நடவடிக்கை எதுவும் இல்லாமல் முடித்து வைக்கப்பட்டது. கவியரசன்  என்ற மாணவன் இப்பள்ளியில் மாணவர் தலைவர் போல வலம் வந்துள்ளார். +1 பயிலும் மாணவர்கள் ,+2வகுப்பு பக்கம் வரக்கூடாது என தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பிளஸ் ஒன் வகுப்பு மாணவர்களுக்கும் கவியரசனுக்கும் பகை இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி பள்ளி கழிவறையில் இருந்து வெளியே வரும்போது  கவியரசன் மீது பிளஸ் ஒன் பயிலும் மாணவர் ஒருவர் இடித்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அந்த மாணவருக்கு கவியரசனுக்கும் அங்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 4ஆம் தேதி மாலை கவியரசன் பள்ளியின் சிறப்பு வகுப்பு முடித்துவிட்டு வீடு திரும்பும் போது பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில் அருகில் வந்தபோது பிளஸ் ஒன் பயிலும்  மாணவர்கள் சிலர் கவியரசனை தாக்கி உள்ளனர்.பதிலுக்கு கவியரசனும் பிளஸ் ஒன் மாணவர்களை தாக்கியுள்ளார் . பிளஸ் ஒன் மாணவர்கள் தாக்கியதில் கவியரசனுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகிலேயே பட்டீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையம் இருந்துள்ளது. அங்கு கவியரசனக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இங்கும் முதல் உதவி செய்யப்பட்டு கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தலையில் ஏற்பட்ட ரத்த கசிவிற்காக அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இதற்கிடையில் கவியரசனை தாக்கியதாக கூறப்பட்ட 15 மாணவர்கள் கைது செய்யப்பட்டு தஞ்சாவூரில் உள்ள இளம் சிறார் நீதி குழுமம் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை அரசு காப்பகத்தில் 12 நாட்களுக்கு வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து இவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று மதியம் கவியரசனின் உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டதால் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் இருந்து  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் நேற்று மதியம் கவியரசன் இறந்ததாக தகவல் பரவியது. இதனால் கும்பகோணம் பட்டீஸ்வரம் பகுதியில் பரப்பரப்பு நிலவியது. பின்னர் காவல் துறையினர் கவியரசன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருடன் உள்ளதாகவும், மூளைச்சாவு அடைந்து விட்டதாகவும் அறிக்கையில் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு மூளைச்சாவு அடைந்த மாணவன் கவியரசன் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டது. கவியரசன் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய மார்ச்சுவரிக்கு  எடுத்துச் செல்ல முயன்ற போது உறவினர்கள் தடுத்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒரு மாணவன் உயிரிழந்ததும், இது தொடர்பாக 15 மாணவர்கள் கைது செய்யப்பட்டதும், கும்பகோணம் மற்றும் பட்டீஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.