உரிமைகள் பறிக்கப்படக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம் - முதல்வர் ஸ்டாலின் பேச்சு!!

 
cm stalin

சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் மொழி ஆக்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளி விழாவில் மனித உரிமைகள் செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி.காயத்ரி கிருஷ்ணனுக்கு  முதலமைச்சர்  ஸ்டாலின் விருது வழங்கினார். அதேபோல் மனித உரிமைகள் செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மதுரை மாநகர காவல் ஆணையர் டி.செந்தில்குமாருக்கு விருது வழங்கி சிறப்பித்தார்இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,  மனித உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பவர்கள், விளிம்பு நிலை மக்களின் உரிமைக்காகப் போராடி வருபவர்களையும் இதில் எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து ஆராயப்படும். மாநில மனித உரிமை ஆணையத்தின் இணையதளம் தமிழில் உருவாக்கப்படும். மனித உரிமைத் தகவல்கள் அனைத்தும் அனைத்து மக்களையும் சென்றடைய தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும்.மனித உரிமைக் கொள்கை, கோட்பாடுகள் குறித்தும், அதனை எந்த வகையில் பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும் அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்த பயிற்சி முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும்.

tn

எந்தவொரு தனிமனிதனின் உரிமையும் மீறப்படக் கூடாது. எத்தகைய சமூகமும் எதன் பொருட்டும் இழிவுபடுத்தப் படக் கூடாது. . இதற்குக் காரணமான யாரும் சட்டத்தின் பார்வையில் இருந்து
தப்பிவிடக்கூடாது. இவை மூன்றும் தான் இந்த அரசினுடைய மனித உரிமைக் கொள்கை என்பதை இந்நிகழ்ச்சியின் வாயிலாக நான் அறிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதியரசர்கள் பங்கேற்கக்கூடிய இந்த நிகழ்ச்சியில் எனது சில கோரிக்கைகளை முன்வைக்கவும் நான் விரும்புகிறேன்.பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தின் கிளை, சென்னையில் அமைய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் மொழி ஆக்கப்பட வேண்டும்.

tn

இவை சட்டத்தின் ஆட்சியில் மக்களின் கோரிக்கைகளாக இவை அமைந்துள்ளன. இக்கோரிக்கைகளை சில மாதங்கள் முன்பு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் நான் முன்வைத்தவைதான். இருப்பினும் மீண்டும் அவற்றை இங்கு வலியுறுத்த, நினைவூட்ட நான் விரும்புகிறேன். இங்கு வந்து கௌரவித்துள்ள மாண்பமை நீதிபதிகள் அவற்றை தமிழ்நாட்டிற்கு நிறைவேற்றித்தரவும் உங்கள் அனைவரின் சார்பில் நான் அவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.நீதித்துறையைப் பொறுத்தவரை நான் இங்கே கோரிக்கை வைப்பவனாகத்தான் வந்திருக்கிறேன் என்பதை நீதியரசர்கள் அறிவார்கள் என்று நான் நம்புகிறேன்.சட்டத்தின் அரசாக - நீதியின் அரசாக - அதுவும் சமூகநீதியின் அரசாக அமைவதுதான் மக்களின் அரசாக அமைய முடியும். 'எல்லோர்க்கும் எல்லாம்' என்ற சமூகநீதித் தத்துவத்தை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசை நாங்கள் நடத்தி வருகிறோம்.மக்களுக்கு இன்றைய தேவை என்ன என்பது மட்டுமல்ல, முக்கியமாக நீதி மட்டும்தான் என்பதை நாங்கள் அறிவோம். 

tn

உலகப் பொருளாதார மேதையான அமர்த்தியா சென் அவர்கள் கூறுகிறார். அவர் The idea of justice என்ற புத்தகத்தில், "நீதியை உருவாக்கிக் கொடுப்பதும் - அநீதி எற்படாமல் தடுப்பதும் - ஆகிய இரண்டும் முக்கியமானது" என்கிறார். அத்தகைய சூழ்நிலையை உருவாக்கவே நாங்கள் செயலாற்றி வருகிறோம். இதைத்தான் அய்யன் வள்ளுவர் தனது குறளில் “வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூம் கோடா தெனின்" - என்று கூறினார். இதன் பொருள், ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நெறி தவறாத ஆட்சி முறையே என்பதாகும். குறள் வழி நடக்கும் அறவழி ஆட்சியால், தமிழ் மக்களின் நலனையே முன்வைத்து செல்கிறோம். அவர்களின் உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து விழைகிறோம். அந்த வகையில், மாநில மனித உரிமை ஆணையமானது இத்தகைய சமூகநீதி சமூகத்தை உருவாக்க அனைத்து வகையிலும் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்" என்று குறிப்பிட்டார்.