வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்றால் நடவடிக்கை- காவல்துறை எச்சரிக்கை

 
traffic police chennai

சென்னை அசோக் நகர் பகுதியில் கடந்த ஐந்தாம் தேதி வாகன ஓட்டி ஒருவரிடம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகராஜன் என்பவர் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு மிரட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து அசோக் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகராஜன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் லஞ்சம் மற்றும் பணம் கையாடல் செய்வது போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார் மீது துறை ரீதியிலான மற்றும் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Chennai traffic police go easy on two wheeler riders on day one


சென்னையில் கடந்த 26ஆம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் படி விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் அபராத தொகையை பெற்று வருகின்றனர். போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்வதற்கு போக்குவரத்து காவல் துறையில் பணிபுரியும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஆகியோருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இசெலான் கருவிகளை பயன்படுத்துவது குறித்து 150 காவலர்களுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நடத்தப்பட்டதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் விதி மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் மற்றும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக காவல்துறையினரின் நன் மதிப்பை கெடுக்கும் வகையில் பணம் கையாடல் செய்வது மற்றும் லஞ்சம் பெறுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று போக்குவரத்து காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும், இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது துறை ரீதியிலான மற்றும் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கு பதிவு செய்யும் போது body worn cameraக்களை பயன்படுத்த வேண்டுமெனவும், வழக்கு பதிவு செய்பவர் மற்றும் விதிமீறலில் ஈடுபடுபவரின் நடவடிக்கைகளை முழுமையாக பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.