என்.எல்.சியில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - வேல்முருகன் வலியுறுத்தல்..

 
 வேல்முருகன்

என்.எல்.சி. நிறுவனத்தில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்மான  வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்.எல்.சி நிறுவனத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 299 தொழிலாளர்களில் ஒரு தமிழர் கூட தேர்வு செய்யப்படாதது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான என்.எல்.சி. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் மின் தேவைக்காக காமராசர் காலத்தில் உருவாக்கப்பட்டது என்.எல்.சி. நிறுவனம். இந்த நிறுவனம் உருவாக்குவதற்கு 30 தமிழர் கிராம மக்கள் தங்களது நிலங்களை அரசுக்கு தாரை வார்த்து கொடுத்தனர். அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி, என்.எல்.சி. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பதுதான். ஆனால், அப்படியான உறுதிமொழியை ஒன்றிய அரசும், என்.எல்.சி நிர்வாகமும் தொடர்ந்து மீறி வருவது கண்டனத்துக்குரியது.
 NLC
அதாவது, என்.எல்.சி நிறுவனத்தில் பொறியியல் படித்த பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கி, அதனைத் தொடர்ந்து நேர்முகத்தேர்வையும் நடத்தி முடித்திருக்கிறது. இதனையடுத்து, வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் மருத்துப்வ பரிசோதனையும் நடைபெற இருப்பதாக என்.எல்.சி நிறுவனம் அறிவித்துள்ளது. மேற்கண்ட வேலைவாய்ப்பிற்காக தேர்வு செய்யப்பட்ட பட்டியலை கடந்த ஜூலை 19 ஆம் தேதி என்.எல்.சி நிறுவனம் வெளியிட்டிருந்தது. இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள 299 பேரும் வட இந்தியர்கள் ஆவார்கள். இதில் தமிழர் ஒருவர் கூட இடம் பெறவில்லை என்பது வேதனையானது.

தொடர்ச்சியாக திட்டமிட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது. ஒப்பந்தப்படி நிலம் வழங்கிய குடும்பங்களின் உறவுகளுக்கு இன்றளவும் பணி வழங்காமலும், பல்லாயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணியை நிரந்தரம் செய்யாமலும், நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்குப் பணி வழங்கப்படாமலும் திட்டமிட்டு என்.எல்.சி நிர்வாகத்தால் புறக்கணிக்கப்படுகின்றனர். தொழில், வணிகம், வேலை வாய்ப்பு போன்ற பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகளில் அந்தந்த மொழித் தாயகத்தில் அந்தந்த மொழி மாநிலத்தவர்க்கு முன்னுரிமையும் முழு வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அந்த நோக்கத்திற்கு முற்றிலும் எதிராகத் தமிழ்நாட்டில் ஒன்றிய அரசுத் துறைகளில் தமிழர்களைப் புறக்கணித்து, பிறமாநில மாணவர்களை முறையற்ற வழிகளில் ஒன்றிய அரசு திணிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

 வேல்முருகன்

எனவே, என்.எல்.சி நிறுவனம் பொறியாளர் வேலைவாய்ப்பிற்கு நடத்திய நேர்முகத் தேர்வை ரத்து செய்து, வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடக்க உள்ள ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனையை உடனடியாக ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால், தமிழ்நாட்டு இளைஞர்கள், ஒருமித்த கருத்துள்ள அரசியல் அமைப்புகளை ஒன்று திரட்டி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என எச்சரிக்கை விடுக்கிறேன். தமிழர்களின் வாழ்வுரிமை பறிபோகும் இந்த அநீதியைத் தடுக்க தமிழ்நாடு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, என்.எல்.சி. நிறுவனத்தில் பொறியாளர் பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கும், நிலம், வீடுகளை வழங்கிய வாரிசுகளுக்கும் முன்னுரிமை கொடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.