4,308 மருத்துவ பணியாளர்களை தேர்வு செய்யும் பணி செப்டம்பரில் நிறைவு பெறும் - அமைச்சர் மா.சு தகவல்..

 
மா சுப்பிரமணியன்

 4,308 மருத்துவப் பணியாளர்களை தேர்வு செய்யும் பணி செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடைந்து விடும் என மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  

சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள அரசு மனநல காப்பகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில்,  மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் புதிய காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டது.  இதனை வழங்கிய  அமைச்சர் மா.சுப்பிரமணியன்   தொடர்ந்து,  போதை மாத்திரை பழக்கத்திற்கு ஆளானவர்களை மீட்டெடுக்கும் ஒப்பியாய்டு மாற்று சிகிச்சை மையத்தையும் திறந்து வைத்தார். அதன்பிறகு  செய்தியாளார்களைச் சந்தித்த அவர், “1794-ம் ஆண்டு முதல்  228 ஆண்டுகளாக  மன நோயாளிகளுக்கு புகலிடமாக தொடங்கப்பட்ட கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகம் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதுபோல் தமிழ்நாட்டில் 43 இடங்களில் அரசு மனநல காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன.

கீழ்ப்பாக்கம் மனநல காப்பக நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவு!

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதார், வருமான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமலேயே காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது. கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகம் இன்று 520 பேருக்கு காப்பீட்டு திட்ட அட்டை வழங்கப்பட்டுள்ளது.  அத்தோடு தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தை தரம் உயர்த்த 40 கோடி செலவில் கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும்  ஒப்பியாயிட் மாற்று சிகிச்சை திட்டம் இன்று கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.  

மா சுப்பிரமணியன்

தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சி, “மருத்துவர்கள் உள்ளிட்ட 4308 மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்தும் பணி செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும். கருமுட்டை விற்பனை விவகாரத்தில் மருத்துவ மையங்களை மூடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்தது. அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு செய்த மேல் முறையீடு இன்று விசாரணைக்கு வருகிறது. இதில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.