3-வதும் பெண்குழந்தை; கருக்கலைப்பு செய்த பெண் பலி

 
medical shop

வேப்பூர் அருகே கருக்கலைப்பு செய்த பெண் பலி மெடிக்கல் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கீழக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி அமுதா, இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில், அமுதா நான்கு மாத கர்ப்பிணி இவர் வயிற்றில் இருக்கும் சிசு பெண் என தெரியவந்தது. பின்னர் கடந்த 17ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் மெடிக்கல்லில் அமுதாவிற்கு கருக்கலைப்பு செய்யப்பட்டு அவர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி அமுதாவுக்கு உதிரப்போக்கு ஏற்பட்டு அவர் மயக்க நிலையில் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் அவரை பரிசோதனை செய்த டாக்டர் அமுதா வரும் வழியிலே இறந்து விட்டதாக கூறினார். இதனை அறிந்த வேப்பூர் போலீசார் அமுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் வேப்பூர் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். பின்னர் அசகளத்தூர் கிராமத்தில் மெடிக்கல் உரிமையாளர் வடிவேலை வேப்பூர் போலீசார் கைது செய்தனர்.