தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

 
Rain

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் வருகிற 18ம் தேதி வரை அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  தமிழகத்தில் இன்று கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி,  திருச்சி, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 
நாளை மற்றும் நாளை மறுதினம் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, தேனி, திருநெல்வேலி  மற்றும் கன்னியாகுமாரி  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஏனைய பகுதிகளில் அநேக  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 17 மற்றும் 18ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rain

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி  இருக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது. இலட்சதீவு, கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு  அரபிக் கடல் பகுதி, குமரிக்கடல் பகுதி,  மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி  காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் 16ம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.