இலங்கைக்கு உதவ அனுமதி கோரி தீர்மானம் நிறைவேற்றம்!!

 
rn

இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதி கோரிய தமிழக அரசின் தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்,  உயிர்காக்கும் மருந்துகள் வழங்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. அதன்படி சட்டப்பேரவையில் இன்று பேசிய முதல்வர் ஸ்டாலின் , "இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு  அத்தியாவசியப் பொருட்களை வழங்கலாம் எனத் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.முக்கியமாக, 40 ஆயிரம் டன் அரிசி: இதனுடைய ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 80 கோடி ரூபாய்,  அதேபோல், உயிர் காக்கக்கூடிய 137 மருந்துப் பொருட்கள் இதன் மதிப்பு 28 கோடி ரூபாய், குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால்பவுடர் இதன் மதிப்பு 15 கோடி ரூபாய்  இவற்றையெல்லாம் இலங்கையில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் நாம் வழங்க நினைக்கிறோம். இவற்றை மாநில அரசு நேரடியாக வழங்க முடியாது ஒன்றிய அரசின் அனுமதியோடு இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் வழியாகத்தான் வழங்க வேண்டும் இலங்கையில் இத்தகைய நெருக்கடி ஏற்பட்டதுமே, இந்திய அரசிடம் இதுகுறித்த கோரிக்கையை நான் முன்வைத்தேன். 31- 3- 2022 அன்று டெல்லி சென்று மாண்புமிகு பிரதமர் அவர்களைச் சந்தித்தபோதும் இதனை நான் வலியுறுத்தியிருக்கிறேன். அதனைத் தொடர்ந்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டும் நான் கோரிக்கை வைத்திருக்கிறேன். அவருக்கும் 15-4-2022 அன்று கடிதம் எழுதி நினைவூட்டியிருக்கிறேன். இன்றுவரை எந்தத் தகவலும் இல்லை. ஆனால் அங்கு நிலைமை தற்போது மிகவும் மோசமடைந்துள்ளது.

stalin

'உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு' என்கிறார் வள்ளுவர் உதவி என்பதும் மனிதாபிமான அடிப்படையில் உடனடி உதவியாக இருக்க வேண்டும். காலத்தே செய்தால்தான் அது உதவி  இதனைத்தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள். இந்த எண்ணத்தை ஒன்றிய அரசுக்குச் சொல்லக்கூடிய வகையில் ஒரு தீர்மானத்தை இந்த மாமன்றத்தில் நிறைவேற்றி அனுப்புவது காலத்தினுடைய கட்டளை என்று அரசு கருதுகிறது. அதனடிப்படையில், கீழ்க்காணும் தீர்மானத்தை நான் இங்கே முன்மொழியக் கடமைப்பட்டிருக்கிறேன்" என்றார்.

தீர்மானம்

stalin

தொடர்ந்து பேசிய அவர், “இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிடும் பொருட்டு, தமிழ்நாடு அரசு அவர்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, பால் பொருட்கள் முதலிய அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கக்கூடிய மருந்துகள் ஆகியவற்றை அனுப்பி வைக்கத் தயாராக உள்ளது என்றும் இதற்கு ஒன்றிய அரசு தேவையான அனுமதி வழங்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசிற்கு ஏற்கெனவே மாநில அரசு கடிதம் எழுதியிருக்கிறது. எனினும், இதுகுறித்து ஒன்றிய அரசிடமிருந்து எந்தவிதமான தெளிவான பதிலும் இதுவரை பெறப்படாத நிலை உள்ளது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கக்கூடிய மக்களுக்கு உதவக்கூடிய வகையில், உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை உடனடியாக அனுப்பி வைக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து, உரிய அனுமதிகளை வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது.” இந்தத் தீர்மானத்தை கட்சி எல்லைகளைக் கடந்து, கருணை உள்ளத்தோடு அனைவரும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டுமென்று கேட்டு, அமைகிறேன் " என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு உதவ அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில்  சட்டப்பேரவையில் இலங்கைக்கு உதவ அனுமதி கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.