15 ஆண்டுகளுக்கு பின் மனைவியையும், மகன்களையும் பார்க்கவந்த தந்தையை வெட்டிக் கொன்ற மகன்!

15 ஆண்டுகளுக்கு பிறகு முதல் மனைவியும், மகன்களையும் பார்க்க வந்த தந்தையை வெட்டி கொலை செய்த மகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்:
தஞ்சாவூர் நாஞ்சிகோட்டை சாலை ஈ.பி. காலனி அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் ஏ. கரும்பாயிரம் (46). திருப்பூரில் கட்டடத் தொழிலாளியான இவருக்கு ராதிகா (38) என்பவருடன் திருமணம் நடைபெற்று ஜீவா (23), விக்ரம் (20) என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கரும்பாயிரம் தஞ்சை ஈச்சங்கோட்டையை சேர்ந்த சிவசங்கரியை இரண்டாவதாக திருமணம் செய்து கடந்த 15 ஆண்டுகளாக திருப்பூரில் இரண்டாவது மனைவி சிவசங்கரி (36) மற்றும் இரண்டு மகள்களுடன் கரும்பாயிரம் வசித்து வந்தார்.
ஏறத்தாழ 15 ஆண்டுகளாக இரண்டாவது மனைவியுடன் திருப்பூரில் வசித்து வந்த இவர், 15 ஆண்டுகளுக்கு பிறகு முதல் மனைவி ராதிகாவை பார்ப்பதற்காக, வெள்ளிக்கிழமை இரவு தஞ்சைக்கு வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, கரும்பாயிரத்துக்கும், ராதிகா மற்றும் மகன்களுக்கும் அதிகாலை குடும்ப பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் இத்தனை ஆண்டுகள் எங்களுக்கு என்ன செய்தாய் என மகன் கேட்டு சண்டை போட்டுள்ளார். இதில் தகராறு முற்றி ராதிகாவை கரும்பாயிரம் மண்வெட்டியால் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து கோபமடைந்த மூத்த மகன் ஜீவா அரிவாளால் கரும்பாயிரத்தை வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கருப்பாயிரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்தினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை தொடர்பாக வழக்குப் பதிந்து ஜீவாவை தேடி வருகின்றனர்.