பாடலாசிரியர் சினேகன் பிரபல நடிகை மீது போலீசில் புகார்

 
bigboss ultimate snegan

தனது அறக்கட்டளையின் பெயரை பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் வசூலித்து வரும் நடிகையின் மீது நடவடிக்கை எடுக்கும்படி சினிமா பாடலாசிரியர் சினேகன் காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.

சினிமா பாடலாசிரியரும் மக்கள் நீதி மைய கட்சியின் நிர்வாகியுமான சினேகன் சென்னை காவல் ஆணையரகத்தில் "சினேகன் பவுண்டேஷன்" என்ற தனது அறக்கட்டளை பெயரில் நடிகை ஜெயலட்சுமி இணையதளம் மற்றும் சமூக வலைதள கணக்குகள் தொடங்கி பொதுமக்களிடம் பணம் வாங்கி வருவதாகவும், இதனால் தனக்கும் தன்னுடைய அறக்கட்டளைக்கும் களங்கம் ஏற்பட்டு வருவதாகவும் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சினேகன், “நான் கடந்த 2015 ஆம் ஆண்டு பதிவு செய்து "சினேகம் பவுண்டேஷன்" என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறேன். அதன் மூலம் எண்ணற்றோருக்கு நற்செயல்கள் செய்து வருகிறேன். சில தினங்களுக்கு முன்பாக தன்னுடைய நண்பர்கள் தன்னுடைய அறக்கட்டளை பெயரில் இணையதளம் மற்றும் சமூக வலைதள கணக்குகள் மூலம் பொது மக்களிடம் நடிகை ஜெயலட்சுமி பணம் கேட்டு வருவதாக தெரிவித்தனர். மேலும், அதற்கடுத்த சில தினங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் தன்னுடைய அறக்கட்டளை பெயரில் பணம் பெறுவதால் தன்னிடம் விசாரணை செய்தனர் இந்த சம்பவம் குறித்து நான் விசாரணை மேற்கொண்டதில், தன்னுடைய "Sneham Foundation" என்ற பெயரில் நடிகையும் பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமி இணையதளம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் அறக்கட்டளை என்ற பெயரில் பொது மக்களிடம் பணம் வாங்கி வருவது தெரியவந்தது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட இணையதளத்தில் உள்ள முகவரியை இரண்டு முறை சட்டபூர்வமாக விளக்கம் கேட்டு கடிதம் எழுதியும், எந்தவித பதிலும் தரவில்லை. மேலும் அதில் கொடுக்கப்பட்டிருந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசிய போது தன்னை தனியாக சந்திக்க வேண்டும் என அவர் கூறினார். மேலும், இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள முகவரியை சென்று ஆய்வு செய்தபோது அங்கு அப்படி ஒரு அலுவலகமே இயங்கவில்லை என்பது தெரிய வந்தது. மேலும், நடிகை ஜெயலட்சுமி தன்னுடைய மகள் பெயரில் வங்கி கணக்குகளை இணையதளத்தில் பதிவிட்டு அதன்மூலம் பொதுமக்களிடம் பணம் பெற்று வருவதும் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி தனது அறக்கட்டளையின் பெயருக்கோ தன்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படாமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளேன்” என தெரிவித்தார்.