சொன்னபடி பெண்கள் வர தாமதமானதால் தகராறு - சினிமா தயாரிப்பாளர் கொலையில் பரபரப்பு வாக்குமூலம்

 
ll

கை, கால்கள் கட்டப்பட்டு வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டு பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டுக் கிடந்த சினிமா தயாரிப்பாளர் கொலையில் பரபரப்பு வாக்குமூலம் போலீஸ் விசாரணையில் வந்திருக்கிறது.  மது அருந்திவிட்டு இரண்டு பெண்களுடன் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்ட தயாரிப்பாளர் சொன்னபடியே பெண்கள் வர தாமதமானதால் தரகர் உடன் தகராறு ஏற்பட்டதில் தரகர் ஓங்கி அடித்ததில் உயிரிழந்திருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.

சென்னையில் ஆதம்பாக்கத்தைச் தொழிலதிபர் பாஸ்கரன்(67). ரியல் எஸ்டேட், பைனான்ஸ், சினிமா தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் செய்து வந்திருக்கிறார்.  1997ம் ஆண்டில் ராம்கி நடித்த சாம்ராட் படத்தினை தயாரித்துள்ளார்.  ஒயிட் என்கிற படத்தினையும் தயாரித்துள்ளார்.   

இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலையில் வீட்டிற்கு வெளியே இருந்த பாஸ்கரன், தனது  குடும்பத்தினருக்கு போன் செய்து, அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் விழாவுக்கு செல்ல வேண்டும். எல்லோரும் தயாராக இருங்கள் என்று சொல்லி இருக்கிறார்.  குடும்பத்தினரும் புறப்பட்டு தயாராக இருந்திருக்கிறார்கள்.  ஆனால் நேரம் ஆக ஆக பாஸ்கரன் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினருக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது.  

b

உடனே அவரது மகன் கார்த்திக், ஜிபிஎஸ் கருவி மூலம் தேடியதில் பாஸ்கரன் சென்ற கார் விருகம்பாக்கம் பகுதியில் இருப்பது தெரியவந்திருக்கிறது. அங்கு சென்று பார்த்தால் கார் கேட்பாரற்று கிடந்திருக்கிறது.  இதன்பின்னர் ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளனர்.  போலீசார் தேடி வந்த நிலையில்,  நேற்று  காலையில் நெற்குன்றம் சின்மயா நகரில் கை, கால்கள் கட்டப்பட்டு , வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டு, பாலிதீன் கவரில் போட்டு சுற்றப்பட்டு சாலையோரம் பாஸ்கரன் உடல் கிடந்திருக்கிறது.

அதன் பின்னர் போலிசார் நடத்திய விசாரணையில்,  நேற்று முன் தினம் மாலை முதல் பாஸ்கரனின் வங்கிக்கணக்கில் இருந்து ஏடிஎம் மூலமாக லட்சக்கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்திருக்கிறது.  இதனால் பணத்திற்காக அவரை யாராவது கடத்திச்சென்று கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் கொலையாளிகளை தேடிவந்தனர் போலீசார். கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப் படைகளின் தீவிர தேடுதல் வேட்டையில் பாஸ்கரனை கொலை செய்து விட்டு நெற்குன்றம் பகுதியில் தலைமறைவாக இருந்த விருகம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் என்ற வாலிபர் பிடிபட்டார்.   கணேசன் ஒரு பாலியல் புரோக்கர் என்பது தெரிய வந்திருக்கிறது.   திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பாஸ்கரன் மதுபோதையில் உல்லாசமாக இருப்பதற்காக இரண்டு பெண்கள் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.   கணேசனும் ஏற்பாடு செய்து தருவதாக சொல்லி இருக்கிறார்.   ஆனால் சொன்ன நேரத்திற்கு இரண்டு பெண்களும் வர தாமதமானதால் கணேசனை தகாத வார்த்தையால் திட்டி இருக்கிறார் பாஸ்கரன்.  இதனால் ஆத்திரமடைந்த கணேசன் பாஸ்கரனை ஓங்கி அடித்திருக்கிறார்.  இதில் அவர் கீழே விழுந்து தலையில் அடிபட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார் பாஸ்கரன்.   இதனால் சடலத்தை பாலிதீன் கவரில் சுற்றி வீசிவிட்டு சென்று இருப்பது தெரிய வந்திருக்கிறது.