தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சசிகலா வாழ்த்து!!

 
sasikala

தமிழகத்தில் பொதுத்தேர்வுகளை எழுத இருக்கும் மாணவச்செல்வங்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

sasikala

இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் , "பொதுத் தேர்வு எழுத இருக்கின்ற பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். "கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை" அதாவது, ஒருவருக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும். கல்வியை தவிர மற்ற எதுவும் செல்வம் அல்ல என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க, மாணவச்செல்வங்கள் கல்வியறிவை பெறுவதன் மூலம் எத்தகைய சூழ்நிலைகளையும், சவால்களையும் சந்தித்து அதில் வெற்றியும் காண முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பொதுத் தேர்வை நினைத்து மனம் கலங்காமல், தைரியமாக எழுதுங்கள். எந்த ஒரு செயலையும் தைரியமாகவும், தன்னம்பிக்கையோடும் செய்யும்போது அதில் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்பதை எப்போதும் மனதில் வையுங்கள், தேர்வுகள் முடியும்வரை மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுத்துவது, தொலைக்காட்சியில் நேரத்தை செலவிடுவது போன்ற செயல்களை முற்றிலுமாக தவிர்த்து, எந்தவித கவனச்சிதறல்களும் ஏற்படாதவண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய முழு நேரத்தையும் படிப்பதற்காக செலவிடுங்கள். தேர்வு மையங்களில், தேர்வுநேரம் முடியும் முன்பே, தேர்வு எழுதும் அறையை விட்டு வெளியேறாதீர்கள். அது உங்களுக்காகவே தரப்படுகின்ற பொன்னான நேரம். அந்த நேரத்தை பொறுமையோடு, முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாழ்க்கை உங்கள் கையில், சிந்தித்து செயலாற்றுங்கள்.

school

அதேபோன்று, மாணவச்செல்வங்கள் சாப்பிடாமல் இருக்காதீர்கள். நல்ல ஆரோக்கியமான, எளிதில் ஜீரணமாகும் உணவுகளை, நேரம் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். இரவு நேரங்களில் நன்றாக உறங்குங்கள். உங்கள் உடல்நிலையையும் நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுடைய பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் முதலில் உங்கள் பெற்றோரிடம் தெரியப் படுத்துங்கள். ஏனென்றால், அவர்களைத் தவிர வேறு யாராலும் உங்களுக்கு சிறந்த தீர்வை சொல்லமுடியாது. எனவே, உங்கள் பெற்றவர்களுக்கு மதிப்பளித்து அவர்களுடைய கருத்துக்களையும் ஏற்றுக்கொண்டு செயல்படுங்கள். மாணவச்செல்வங்கள் இவற்றை கடைபிடித்தாலே போதும், கண்டிப்பாக சிறந்த முறையில் தேர்வை எழுதி அதில் வெற்றியும் காண முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

sasikala

பெற்றோர்களும், உங்கள் பிள்ளைகள் மீது கவனம் செலுத்துங்கள். அவர்கள் மீது முழு நம்பிக்கை வையுங்கள். அதேபோன்று, அவர்கள் படிப்பதற்கு எந்தவித இடையூறும் இல்லாத சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுங்கள். நம் வருங்காலம், இளம்தலைமுறையினரின் கையில்தான் உள்ளது. எனவே நம் மாணவச்செல்வங்கள் நல்ல உயர்கல்வி பெற்று, தங்களுடைய வாழ்க்கையில் உன்னத நிலைகளை அடைய, இப்பள்ளிப் பருவ பொதுத்தேர்வுகளில் வெற்றிபெறுவது மிகவும் அத்தியாவசியமானது. எனவே, பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை சந்திக்க இருக்கும் நம் மாணவச்செல்வங்கள் அனைவரும் சிறந்த முறையில் தேர்வுகளை எழுதி, அதில் வெற்றியடைய வேண்டும் என்று எல்லாம்வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.