ஏ.டி.எம் இயந்திரத்தை வெல்டிங் இயந்திரத்தால் உடைத்து ரூ.4.90 லட்சம் கொள்ளை

 
atm theft

நாமக்கல் அருகே லட்சுமி விலாஸ் வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தை வெல்டிங் இயந்திரத்தால் உடைத்து அதிலிருந்த 4 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

நாமக்கல் அடுத்துள்ள பெருமாள் கோயில் மேடு பகுதியில் நடேசன் என்பவருக்கு சொந்தமான காம்பிளக்ஸில் லட்சுமி விலாஸ் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் இயந்திரம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் வெல்டிங் இயந்திரத்தை கொண்டு உடைத்து அதில் இருந்த சுமார் 4 லட்சத்து 89 ஆயிரத்து 900 ரூபாய் கொள்ளையடித்து சென்றனர். மேலும் மோப்ப நாய்கள் ஏதும் தங்களை கண்டறியாத வகையில் ஏ.டி.எம் இயந்திரம் அமைந்துள்ள அறை  முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு  சென்றுள்ளனர்.

namakkal

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரன் தேஜஸ்வி மற்றும் புதுச்சத்திரம் போலீசார் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடித்து எப்படி என விசாரணை மேற்கொண்டதோடு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு செய்தனர். மேலும் ஏ.டி.எம் மையத்தில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியது இப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.