புத்துயிர் பெறும் பழைய கட்டிடங்கள்.. அடுக்குமாடி குடியிருப்பு உரிமைச் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்..

 
பழைய கட்டிடங்கள்

பழமையான அடுக்குமாடி இல்லங்களில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கான திருத்தப்பட்ட விதிகள் அடங்கிய தமிழ்நாடு அரசின் புதிய அடுக்குமாடி குடியிருப்பு உரிமை சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள் அறிமுகமாகி 50 ஆண்டுகளுக்கும் மேல் கடந்துவிட்டதால், பல்வேறு வீடுகள் மோசமான நிலையில் உள்ளன.  இவற்றை பராமரிக்கும் திட்டத்திற்கு அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாமல் இருப்பதால்,  பழைய அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விடும் அபாயத்தில் உள்ளன. அடுக்குமாடி குடியிருப்பு உரிமைச் சட்டம்-1994ல்  பல்வேறு பாதகமான சூழல் உள்ளதால், அதற்கு மாற்றாக தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமைச் சட்டம்- 2022 சட்டமன்றத்தில் அறிமுகம் செய்தது.

Apartment Ownership Act

இதில் பழமை வாய்ந்த கட்டிடத்தை இடிப்பதற்கோ அல்லது புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளவோ அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு உரிமையாளர்கள் ஒப்புதல் போதுமானது என்ற முக்கிய பகுதி இடம் பெற்றிருந்தது.  இச்சட்டத்தின்படி நான்கு குடியிருப்புகளுக்கு மேல் உள்ள அடுக்குமாடி வளாகத்தில் ஒரு சங்கம் தான் இருக்க வேண்டும், ஒவ்வொரு வளாகத்திற்கும் ஒரு சங்கம் மட்டுமே இருத்தல் அவசியம்,  குடியிருப்பில் உள்ள ஒரு உறுப்பினர் பொதுவான பயன்பாடு மற்றும் பிற பராமரிப்பு கட்டணத்தை செலுத்தாத பட்சத்தில் நிலுவை கட்டணத்தை செலுத்தும் வரை, அவர்  வீட்டினை விற்பனை செய்ய முடியாது என்பது  உள்ளட விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

திரௌபதி முர்மு

இந்த மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில்,  தமிழ்நாடு அரசின் அடுக்குமாடி குடியிருப்பு உரிமைச் சட்டம்-2022 ற்கு  குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதல் கிடைத்துள்ளது.  தமிழ்நாடு அரசு புதிய விதிகளை அறிவிக்கும் நாளில் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.   தமிழ்நாடு அரசின் அடுக்குமாடி குடியிருப்பு உரிமைச் சட்டம்-2022ஐ  வரவேற்றுள்ள கட்டிட நிறுவனங்கள், சொத்து மேம்பாட்டாளர்கள் மற்றும் அடுக்குமாடி வீடுகளின் உரிமையாளர்கள்,  இதன் மூலம் பழைய அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்தும் மறுவடிவம் பெரும் சூழல் உருவாகி இருப்பதாக கூறுகின்றனர்..