சீர்காழியில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக மழை - பாலச்சந்திரன்

 
Balachandran

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில்  44 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்  இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, இன்று வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வட தமிழகம் மற்றும் புதுவை கடற்கரை பகுதிகளில் நிலவுகிறது. இது தொடர்ந்து மேற்கு திசையில் தமிழகம் மற்றும் கேரள பகுதிகளை கடந்து அரபிக் கடல் பகுதிக்கு செல்லும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. 6 இடங்களில் அதி கனமழையும், 16 இடங்களில் மிக கனமழையும், 108 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 44 செமீ மழை பதிவாகி உள்ளது. சீர்காழியை பொருத்தவரை இது கடந்த 122 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச மழையாகும். இந்த அளவுக்கு அதிகப்படியான மழை பெய்ததற்கு மேகவெடிப்பு காரணமில்லை. 

rain

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதியில் இன்றும் நாளையும் பரவலாகவும், 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு கூறினார்.