மழை பாதிப்பு : ரூ. 1000 நிவாரணம் வழங்க தமிழக அரசு அரசாணை..

 
தமிழக அரசு நிவாரணம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 1000 நிவாரணம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 11ஆம் தேதி வரலாறு காணாத கனமழை கொட்டித்தீர்த்தது.  இதனால்  குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்தது. அதேபோல், விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்ததால்,  சம்பா சாகுபடி பயிர்கள் சேதமடைந்தன.  இதனையடுத்து  பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் ரூ. 1000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

நீரில் மூழ்கிய பயிர்

அதன்படி,  மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி தாலுக்கா குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 1,000 நிவாரண உதவி தொகை நவம்பர் 24-ஆம் தேதி முதல் அந்தந்த நியாய விலை கடைகளில் வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவித்திருந்தார். இதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதற்காக ரூ. 16.16 கோடி  நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு

சீர்காழியில்  99 ஆயிரத்து 518 குடும்ப அட்டைதாரர்களுக்கும்,  தரங்கம்பாடியில் 62, 192 குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மயிலாடுதுறை  சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய இரண்டு தாலுகாக்களில் உள்ள 239 நியாய விலை கடைகளில் மொத்தமாக  1,61 647 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.