தூத்துக்குடியில் மேலும் 2 அலகுகளில் மின் உற்பத்தி!!

தூத்துக்குடியில் மேலும் 2 அலகுகளில் மின்உற்பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறனுடைய 5 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலமாக 1050 மெகாவாட் மின் உற்பத்தி கிடைக்கிறது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் முதல் பிரிவு மற்றும் இரண்டாவது பிரிவு மூன்றாவது பிரிவுகள் ஆகியவை 40 ஆண்டுகளாக மின் உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றன. நான்காவது மற்றும் ஐந்தாவது பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது கடந்த சில நாட்களாக கோடை வெயில் தாக்கம் அடைந்துள்ளதால், மின் தேவை என்பது அதிகமாகியுள்ளது.
இந்த சூழலில் நிலக்கரித் தட்டுப்பாடு காரணமாக கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் கையிருப்பு உள்ள நிலக்கரி கொண்டு ஆலையின் பிரிவுகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 2,3 அலகுகள் இயக்கப்படாமல் மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் நிலக்கரி வந்ததால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மேலும் இரண்டு அலகுகளில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. ஏற்கனவே முதல் அலகு செயல்பட்டு வந்த நிலையில், 2,3 அலகுகளும் இயங்க துவங்கியுள்ளதால் 630 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது. 4,5 ஆவது அலகு தொடர்ந்து செயல்படாததால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.