பெரியார் பல்கலை. ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு, ஊழல்- விசாரணைக் குழு அமைப்பு

 
periyar univ

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் நியமனம், இடஒதுக்கீடு பின்பற்றாதது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள், ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க உயர்கல்வித் துறையின் கூடுதல் மற்றும்  இணைச் செயலாளர்கள் அடங்கிய  விசாரணை குழு அமைத்து உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 

salem periyar university


சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் நியமனம் உள்ளிட்டவற்றில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக அரசிடம் பல புகார்கள் குவிந்தன. இது குறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், பெரியார் பல்கலையில் உடற்கல்வி இயக்குநர் நியமனத்தில் பல்கலைக்கழக மானிய குழுவின் வழிகாட்டுநெறிமுறைகள் பின்பற்றபடாதது. நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் ஆகிய பதவிகளுக்கு இடஒதுக்கீட்டு ஆணைப்படி நிரப்பப்படாதது. தமிழ்த்துறை தலைவர்  நியமனத்தில் நடைபெற்ற போலி சான்றிதழ் முறைகேடு. அரசு உதவிபெறும் கல்லூரிகளில் காலி உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் குழுவில் பல்கலைக்கழக பிரதிநிதி ஒருவர் இடம்பெறவேண்டும் என்ற அடிப்படையில், விதிகளுக்கு புறம்பாக பெரியசாமி என்பாரை முறைகேடாக நியமித்தது.

பெரியார் பல்கலைக்கழகத்தில் சுமார் 450 பணியாளர்கள் பணியாற்றிவரும் நிலையில், 18 மாணவர்களை பணபரிமாற்றம் உள்ளிட்ட பலமுறைகேடுகளுக்கு பிறகு மணிக்கணக்கு அடிப்படையில் பணியமர்த்தப்பட்டது. தொலைதூரக்கல்வி மையத்திற்கான  சாப்ட்வேர் ஒன்றினை முறைகேடாக கொள்முதல் விதிகளை மீறி கணினி அறிவியல் துறைத் தலைவர் தங்கவேலின் உறவினர் நிறுவனத்தில் கொள்முதல் செய்யப்பட்டது. பல்கலைக்கழகத்திற்கு தேசிய தர அங்கீகாரம் (NAAC) பெறுவதற்காக செய்யப்பட்டுள்ள செலவின வகையில் ரூ.1.30 கோடி கணக்கு காட்டப்பட்டதில்,  பெரும்பாலான ரசீதுகள் பல்கலைக்கழக நூலகர் ஜெயப்பிரகாஷ்  என்பவரால் போலியாக தயார்செய்யப்பட்டது. பட்டியல் இன, பட்டியல் பழங்குடியினர் உரிமைகள் மறுக்கப்பட்டது, சிண்டிகேட் உறுப்பினர் நியமனத்தில் விதிமீறல் உள்ளிட்ட 13 புகார்கள் உயர் கல்வித் துறைக்கு வந்துள்ளது.

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள உயர்கல்வித் துறை அரசு கூடுதல் செயலாளர் சு. பழனிசாமி மற்றும் அரசு இணைச் செயலாளர் ம. இளங்கோ ஹென்றி தாஸ் ஆகியோர் கொண்ட விசாரணை குழுவினை அமைத்து உயர் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.  அரசாணையில், பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றதாக கிடைக்கப்பெற்ற 13 குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இது போன்ற தவறுகள் மீண்டும் நிகழாதவாறு தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான வழிமுறைகளை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். தவறுக்கு பொறுப்பான அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் குறித்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

இந்தக் குழுவானது விசாரணை அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.