தமிழ்நாடு எப்போதும் தேசிய உணர்வுமிக்கதாக இருந்து வருகிறது - பிரதமர் மோடி பேச்சு

 
PM Modi

தமிழ்நாடு எப்போதும் தேசிய உணர்வுமிக்கதாக இருந்து வருகிறது என பிரதமர் மோடி பட்டமளிப்பு விழாவில் பேசியுள்ளார். 

திண்டுக்கல் அருகே காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இதற்காக மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் திண்டுகல் வருகை தந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசாக பொன்னியின் செல்வன் நாவல் புத்தகங்களை பரிசாக வழங்கினார். இதனை தொடர்ந்து காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார். இசையுலகில் இளையராஜா ஆற்றிய சேவையை பாராட்டி அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

modi and ilayaraja

பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:  காந்திகிராம பல்கலைக் கழகத்தை மகாத்மா காந்தி திறந்து வைத்தார். கிராமப்புற மேம்பாடு குறித்த அவரது எண்ணங்களின் உணர்வை இங்கு காணலாம். கிராமத்தின் ஆன்மா நகரத்தின் வசதி என்பதே எங்கள் கொள்கை. காந்தியின் கொள்கையே தற்போதைய தற்சார்பு திட்டம். தற்போதைய வளர்ச்சி கிராமத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. கிராமங்கள் சுயமாக செயல்பட்டால் நாடும் சுயமாக செயல்படமுடியும். கிராமங்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் பிரச்சனைகளை ஒன்றாக எதிர்கொள்ளலாம். கிராமங்களில் இணையம் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2 லட்சம் கிராமங்களில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. காதி பொருட்கள் உலக அளவில் கவனம் பெற்று வருகிறது, இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. தமிழ்நாடு எப்போதும் தேசிய உணர்வுமிக்கதாக இருந்து வருகிறது. காசி தமிழ் சங்கமம் விரைவில் காசியில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழகத்தின் மொழி, கலாச்சாரம் கொண்டாடப்படும். பெண் சக்தியில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது. இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் இருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.