எண்ணும்,எழுத்தும் திட்டம்: சிறப்பாக செயல்பட்ட 812 ஆசிரியர்களுக்கு கௌரவம்..

 
பள்ளிக்கல்வித்துறை

எண்ணும் எழுத்தும் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்கள் 812 பேருக்கு குடியரசு தினவிழாவில் சிறப்பு செய்ய பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு கொரோனா தொற்று பரவல் அதிகரித்தது. இதன் காரணமாக  பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. சுமார் 2 ஆண்டுகள் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்த  முடியாத நிலை ஏற்பட்டது.  ஆன்லைன் வாயிலாகவே மாணவர்கள் கல்வி கற்று வந்தனர். அத்துடன் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.  அதிலும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்புகளில் படித்த குழந்தைகள் பள்ளிக்கு நேரடியாக வர முடியாத நிலை ஏற்பட்டதால், 1 முதல் 3ம் வகுப்பு வரை படித்த குழந்தைகளின்  கற்றலில் பெரிய இடைவெளி ஏற்பட்டது. அந்த இடைவெளியை போக்கி அவர்கள் எண்ணையும், எழுத்துகளையும் அடையாளம் கண்டு எழுதவும் படிக்கவும் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

எண்ணும்,எழுத்தும் திட்டம்: சிறப்பாக செயல்பட்ட  812  ஆசிரியர்களுக்கு கௌரவம்..

இதனால்  தமிழ்நாடு அரசு, எண்ணும் எழுத்தும் என்கிற திட்டத்தை கொண்டு வந்தது. அதற்காக அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகளுக்கு பாடம் நடத்த சிறப்பு  ஆசிரியர்கள் நியமித்தது. அப்படி நியமிக்கப்பட்ட சிறப்பு ஆசிரியர்களில் சிறப்பாக செயல்பட்ட 812 ஆசிரியர்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த  பட்டியல் தற்போது பள்ளிக்கல்வித்துறை  வெளியிட்டது. அவர்களை, சென்னையில் நாளை நடக்க இருக்கும் குடியரசு தின விழாவில் கௌரவிக்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் சென்னை சேர்ந்த 22 பேரும், செங்கல்பட்டைச் சேர்ந்த 12பேரும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 13பேரும், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த  3 பேரும்  இடம் பெற்றுள்ளனர். நாளை சென்னை மெரினா கடற்கரையில் நடக்க உள்ள குடியரசு தின விழாவில்  பட்டியலில் இடம்பெற்றுள்ள  812 பேருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.