75-வது சுதந்திர தினத்தையொட்டி 17 லட்சம் வீடுகளில் தேசியக் கொடி - சென்னை மாநகராட்சி திட்டம்..

 
75-வது சுதந்திர தினத்தையொட்டி 17 லட்சம் வீடுகளில் தேசியக் கொடி -  சென்னை மாநகராட்சி திட்டம்..

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 17 லட்சம் வீடுகள் மற்றும் முக்கிய சாலைகளில் தேசியக் கொடி ஏற்ற சென்னை மாநகராட்சி முடிவுசெய்துள்ளது.  

தேசியக் கொடி

மத்திய அரசு அண்மையில்  ஒரு அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. அதில், நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 13, 14, 15-ம் தேதிகளில்  அனைத்து வீடுகளிலும்  தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று   அறிவித்திருந்தது.   மத்திய அரசின் இந்த அறிவிப்பினை  செயல்படுத்துவது  குறித்து,   கடந்த 27-ம் தேதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு துறைகளின் செயலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.   இந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும்  ஆகஸ்ட் 13, 14, 15-ம் தேதிகளில் அனைத்து வீடுகள், அரசு அலுவலகங்கள், பேருந்துகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தியதாக  கூறப்படுகிறது.

சென்னை மாநகராட்சி

 அதேபோல்  சென்னை மாநகராட்சியில் உள்ள நிப்பன் மாளிகையிலும் இது  தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப்சிங்பேடி,  நிலைக் குழுத் தலைவர்கள், மண்டல தலைவர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில்,  “சென்னையில் உள்ள 17 லட்சம் குடியிருப்புகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்,   அனைத்து வணிக நிறுவனங்களிலும் தேசிடியக் கொடி ஏற்ற வேண்டும்,  அனைத்து கடைகளிலும் தேசியக் கொடி விற்பனை செய்ய வேண்டும்,  சுய உதவிக் குழுக்கள் மூலம் தேசியக் கொடி தயாரிக்கலாம்,  முக்கிய சாலைகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்” என்று முடிவெடுக்கப்பட்டது.  மேலும் இது தொடர்பான அறிவிப்பு  விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.