”உங்களுக்கெல்லாம் மெரினாவில் சமாதி வைத்ததே அதிகம்” - திமுகவை சாடிய சீமான்

 
seeman

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடற்கரையில் சிலை வைக்கும் முடிவை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக எதிர்த்துள்ளார். 

சென்னை அருகே எண்ணூர் முகத்துவாரத்தில் ஆற்றின் குறுக்கே உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து எண்ணூர் பஜாரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது: இந்தியா 110 லட்சம் கோடி கடன் வைத்துள்ளது. தமிழகத்திற்கு 7 லட்சம் கோடி கடன் வந்துள்ளது. இந்த கடன் சதவீத உயர்வுதான் ஆட்சியாளர்கள் காட்டுகின்ற, கட்டமைக்க நினைக்கின்ற வளர்ச்சி. தமிழகத்தில் 10 ஆயிரம் அரசுப் பள்ளிக்கூடம் இடியும் நிலையில், சீரமைக்க முடியாத நிலையில் உள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள தொழிலதிபர்களிடம் பணம் வாங்கி சீரமைக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்து அவர்களிடமே ஊதியம் பெற்றுக் கொள்ளும்படி கூறுவீர்களா?

seeman

இவ்வளவு சிக்கல் இருக்கும்போது கருணாநிதி நினைவாக 80 கோடி ரூபாய்க்கு கடலுக்குள் பேனா வைக்கிறேன் என்று கூறுவது சரியா? அப்படியெனில் அண்ணாதுரை அடிக்கடி மூக்குப்பொடி போடுவார். அதனால் கடலுக்குள் பொடி டப்பா சிலையும், எம்ஜிஆர்.,க்கு நினைவாக தொப்பி சிலையும், ஜெயலலிதா திரைப்பட துறையில் மேக்அப் பெட்டியை அதிகம் பயன்படுத்தியதால் அவரது நினைவாக மேக்அப் பெட்டி சிலையும் கடலுக்குள் வைப்பீர்களா? உங்களுக்கெல்லாம் (கருணாநிதிக்கு) சமாதி வைத்ததே அதிகம். தேவை இல்லாத ஆட்டமெல்லாம் காட்டக்கூடாது. மக்கள் காசை வீணடிக்கக்கூடாது, ஆட்சி நடத்துங்கள். இவ்வாறு அவர் கூறினார்.