அதிமுக ஆட்சியின் அவலங்களை மறைக்க நீட் விவகாரத்தை ஈபிஎஸ் திசைத்திருப்புகிறார்- மா.சு

 
ma Subramanian

உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு வழக்கு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியின்  அறிக்கைக்கு  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். 

masu

இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைமையிலான புதிய அரசு 7.5.2021-இல் பொறுப்பேற்றவுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 5.6.2021 அன்று வெளியிட்ட  அறிவிப்பினை  தொடர்ந்து 10.06.2021 அன்று ஓய்வு பெற்ற நீதியரசர் திரு.ஏ.கே.இராஜன் அவர்கள் தலைமையில், உயர்நிலைக் குழு ஒன்று அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது.  இந்தக் குழு தனது பரிந்துரைகளை 14.07.2021 அன்று அரசுக்கு வழங்கியது. இந்த பரிந்துரைகளை தலைமைச் செயலாளர் தலைமையிலான குழு ஆராய்ந்து, மருத்துவக் கல்வி சேர்க்கை முறைகளில் மாணவச் சமுதாயத்திற்கான சமூக நீதி பாதுகாப்பதை உறுதி செய்யும் வகையில், மருத்துவக்கல்வி சேர்க்கையின் அனைத்து நிலைகளிலும் ’நீட்’ தேர்வினை புறந்தள்ளுவதற்கு, தமிழ்நாடு மாநில சட்டம் 3/2007-னைப் போன்றதொரு புதிய சட்டத்தினை மாநில அரசு இயற்றி, மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற முயற்சிக்கலாம் என்று குழு பரிந்துரைத்தது.

தலைமை செயலாளர் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட செயலாளர்கள் அடங்கிய குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 13.9.2021 அன்று, தமிழ்நாடு மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம் 2021 என்ற சட்டமுடிவு, ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு, 18.9.2021 அன்று மாண்புமிகு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

மாண்புமிகு ஆளுநர் அவர்களால் மறுபரிசீலனைக்கு திருப்பி அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவு, 8.2.2022 அன்று சட்டமன்றப் பேரவையில் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப மாண்புமிகு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

மேற்படி சட்ட முன்வடிவை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளார்.

ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகமும் இந்த சட்ட முன்வடிவு குறித்து சில தெளிவுரை மற்றும் விளக்கங்களை மாண்புமிகு ஆளுநர் அலுவலகம் மூலமாக மாநில அரசை கேட்டுக் கொண்டது.  அவைகளின் மீதான மாநில அரசின் அறிக்கை ஒன்றிய அரசுக்கு அனுப்ப 27.7.2022 அன்று ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.

மாண்புமிகு ஆளுநர் அலுவலகம், ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்திடமிருந்து பெறப்பட்ட இந்திய அரசின் உயர்கல்வி அமைச்சகத்தின் கருத்துகள் மீது விளக்கங்கள் கோரிய கடிதம், தமிழ்நாடு அரசின் சட்டத் துறையின் செயலாளர் (சட்டம்) அவர்களுக்கு 26.8.2022 நாளிட்ட கடிதத்தின் வாயிலாக சட்டத் துறையில் பெறப்பட்டது.  அதற்கான விரிவான குறிப்பு, 7.10.2022 அன்று ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது.

ஒன்றிய அரசால் கேட்கப்பட்ட அனைத்து விபரங்களுக்கும் தமிழ்நாடு அரசு விளக்கம் தந்துள்ள நிலையிலும் இந்த சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஒன்றிய அரசு மௌனம் காத்து வருகிறது.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவின் மீது மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்களின் ஒப்புதலை விரைவாக பெற்றுத் தருமாறு  ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த வழக்குகள் தள்ளுபடி செய்த நிலையில், உரிய சட்ட விதிகளை ஆராயாமல் அவசர கோலத்தில் நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு பதிலாக முந்தைய சட்ட விதிகளை எதிர்த்து மற்றும் ரத்து செய்யுமாறும் குறிப்பிட்டு 4.1.2020 அன்று ஒரு வழக்கு  முந்தைய அதிமுக அரசால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

தனக்கு இருக்கும் நெருக்கடியை மறைக்கவே இபிஎஸ் இப்படி செய்கிறார்.. போட்டு  தாக்கும் மா.சுப்பிரமணியன்.!

அதாவது 1956-ஆம் ஆண்டு இந்திய மருத்துவக் குழும சட்டம் மற்றும் 1948-ஆம் ஆண்டு பல் மருத்துவ சட்டம் ஆகியவற்றிற்கு கொண்டு வரப்பட்ட சட்டதிருத்தத்தால்,  இளநிலை மருத்துவப் பட்டம் மற்றும் முதுநிலை பட்ட படிப்புகளுக்கு 2016-17-ஆம் கல்வியாண்டு முதல் நீட் எனும் தேசிய தகுதி பொது நுழைவுத் தேர்வு, மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆனால்,  மேற்குறிப்பிட்ட 1956-ஆம் ஆண்டு இந்திய மருத்துவ குழும சட்டம் திரும்ப பெறப்பட்டு மருத்துவ படிப்புகளை ஒழுங்கமைக்க தேசிய மருத்துவ ஆணைய சட்டம், 2019,  8.8.2019 அன்று மாண்புமிகு குடியரசு தலைவர்  ஒப்புதல் பெறப்பட்டு பின் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  தற்பொழுது நீட் தேர்வு மற்றும் மாணவர்கள் சேர்க்கை குறித்த பிரிவுகள் தேசிய மருத்துவ ஆணைய சட்டம், 2019-ன் படி வரையறுக்கப்பட்டுள்ளது.

முந்தைய அதிமுக அரசு மேற்கண்ட மாற்றங்களை கருத்தில் கொள்ளாமல் தவறான முந்தைய சட்ட விதிகளைக் குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் மேற்கொண்டு இவ்வழக்கினை தொடர்ந்து நடத்தினால் அது தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பாதகமாக அமையும் என்பதாலும்,

ஏற்கனவே தமிழ்நாடு அரசு மருத்துவ மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம்,  2021  மாண்புமிகு  குடியரசு தலைவரின் ஒப்புதலை எதிர் நோக்கி இருப்பதாலும் மேற்கண்ட வழக்கினை தற்காலிகமாக ஒத்தி வைக்குமாறு தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது.

தமிழ்நாட்டு மருத்துவ மாணவர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாகவும்,  நீட் தேர்வு முறையில் விலக்கு அளிக்கும்  வகையிலும் தேவையான முயற்சிகளை தொடர்ந்து  தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் உரிய முகாந்திரத்துடன் முந்தைய அதிமுக அரசு  வழக்கு தாக்கல் செய்யாமலும்,  காலவதியான சட்டங்களின் கீழ் கடமைக்காக வழக்கினை தவறாக தாக்கல் செய்துள்ளதாலும், அதனை தொடர்ந்து நடத்தினால் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பாதகமாக சூழல் ஏற்படும் என்பதாலும் தமிழ்நாடு அரசு வழக்கை சட்ட வல்லுநர்களிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.  உண்மை இவ்வாறு இருக்க எதிர்க்கட்சித் தலைவர் முந்தைய ஆட்சியின் அவலங்களை மறைப்பதோடு இதுபோன்ற மக்களை திசை திருப்பும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள் என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.