தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ் நோக்கம் - அமைச்சர் குற்றச்சாட்டு

 
sekar babu

தமிழகத்தில் பேரணி மூலம் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கம் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

சென்னை திருவிக நகர் மண்டலத்தில் பருவகால மருத்துவ முகாமை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: வெள்ள தடுப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டதால் சென்னையில் 98 சதவீத பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டன. மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கழிவு நீரை அகற்றுவதோடு மருத்துவ முகாம்களை நடத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் சென்னையில் இன்று பெருநகர மாநகராட்சியுடன் சுகாதாரத் துறையும் இணைந்து 200 வார்டுகளில் மழைக் கால மருத்துவ முகாமை நடத்துகிறது. சென்னையில் 156 கி.மீ. தூரத்துக்கு மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளன. மீதியுள்ள 44 கிமீ தூரத்துக்கு பணிகள் முடிந்தால் அடுத்த ஆண்டு பருவ மழைக்கு பிரச்னை வராது. பள்ளங்கள் உள்ள பகுதிகளில் சாலைகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பருவமழை முடிந்தவுடன் சாலைகள் அமைக்கும் பணி தொடங்கும். சென்னையில் நேற்று விபத்துக்குள்ளான பாழடைந்த கட்டடம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

மக்களை பற்றி அக்கறை இல்லாமல், தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்தி கலவரம் ஏற்படுத்த நினைக்கின்றனர். ஆனால் தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க முதலமைச்சர் அனைத்து முடிவும் எடுப்பார். இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு கூறினார்.