உதிரத்தால் உலகை இயங்கச் செய்யும் உழைப்பாளிகளுக்கு வாழ்த்துகள் - சீமான்..

 
Seeman

 மே தினத்தில்,  தங்கள் உதிரத்தால் உலகை இயங்கச் செய்யும் உழைக்கும் மக்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபட உறுதியேற்போம் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஹெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுழலும் உலகின் அச்சாணியாய் திகழும் உழைப்பாளர்களின் உரிமை எமுழக்கத்திற்கான திருநாள்தான், மே நாள் ! நவீன காலம் தொழிற்கருவிகள் கண்டுபிடிப்போடு மட்டும் தொடங்கவில்லை; ஓய்வு ஒழிச்சலற்று பலமணிநேரம் அந்தத் தொழிற்கருவிகளுக்கு இணையாய் சுழன்று உழைத்த உழைப்பாளர்களோடும்தான் தொடங்கியது. இருபது மணி நேரத்திற்கும் மேலாக ஆலைகளில் நசுங்கிய உழைப்பாளர்கள், எட்டு மணிநேர வேலை என்ற உரிமைக்காகப் போராடினார்கள்.  

May Day

1886ஆம் ஆண்டு மே 1 ஆம் நாள் எட்டுமணிநேர வேலைக்காக அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு அறிவித்த நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டமே மே நாள் என்ற உழைப்பாளர் உரிமை தினத்தின் தொடக்கமாக அமைந்தது.  அந்த உரிமைப்போரில் துப்பாக்கிக்குண்டுக்கு பலியாகியும், தூக்குமேடை ஏறியும் உயிர்தந்த ஈகியர்களை இந்நாளில் நினைவிலேந்துவோம்.

சீமான்

 உலகமயம், தாராளமயம், முதலாளித்துவம் என நம்மை நோக்கி வரும் அனைத்து அச்சுறுத்தல்களுக்குமெதிராக களம்காண உழைப்பாளர்களின் உரிமைகளுக்காகப் போராடுவோம். போராடிப்பெற்ற உரிமைகளை இழந்துவிடாமல் பாதுகாப்போம்! புதியதோர் தேசம் செய்வோம்! மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்! தங்கள் உதிரத்தால் உலகை இயங்கச் செய்யும் உழைக்கும் மக்களின் மேம்பாட்டுக்குப் பாடுபட உறுதியேற்று, உழைப்பாளிகளுக்கு எனது புரட்சிகரமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.