இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் உள்ளது - கனிமொழி பேச்சு

 
kanimozhi

இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் எல்லா துறையிலும் விளங்கி வருகிறது என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். 

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும், ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ,  அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ /மாணவியருக்கு முதற்கட்டமாக அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் காலை வேளைகளில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று  அறிவித்தார்.  இத்திட்டமானது பேரறிஞர் அண்ணாவின் 114ஆவது பிறந்தநாளையொட்டி நேற்று மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் மற்ற மாவட்டங்களில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளது. மதுரையை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் இன்று தொடங்கியுள்ளது. இதேபோல் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் 66 பள்ளிகளில் இன்று தொடங்கப்பட்டது. இதனை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.  

Kanimozhi

இதனை தொடர்ந்து அவர் பேசியதாவது: தமிழகத்தில் முதன் முதலில் 1920-ம் ஆண்டு நீதி கட்சியின் ஆட்சியின் போது சென்னையில் ஓரு பள்ளியில் உணவு திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் காமராஜர் அதை விரிவுப்படுத்தினார். 1989-ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் 5 முட்டையுடன் வழங்கப்பட்டது. தற்போது காலை உணவு திட்டம் உலகத்திற்கே வழிகாட்டும் உன்னதமான திட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் எல்லா துறையிலும் விளங்கி வருகிறது. காலை உணவினை குழந்தைகள் தேவைக்கேற்ப வாங்கி அதிலுள்ள காய்கறிகள் உள்பட அனைத்தையும் சாப்பிட வேண்டும். உங்கள் நலன் தான் முக்கியம் என்று முதலமைச்சர் அறிவித்துள்ள இத்திட்டம் எதிர்கால தலைமுறையினருக்கு வாழ்வளிக்கும் திட்டமாகும். அனைத்து துறைகளும் முன்னேறி வரும் நிலையில் நாம் இனி போட்டி போட வேண்டியது உலக நாடுகள் மத்தியில் தான். வளர்ந்து விட்ட தமிழ்நாட்டை அனைவரும் ஆச்சரியத்துடன் திரும்பி பார்க்கின்றனர். இவ்வாறு கனிமொழி கூறினார்.