காங்கிரஸ் வேட்பாளர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்- கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் வேட்பாளர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டு தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , அந்த தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க கேட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மாநிலத் துணைத் தலைவர் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினர்.திமுக தரப்பில் தலைவர் மு.க ஸ்டாலின் உடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர் பாலு, ஆ.ராசா அமைச்சர்கள் துரைமுருகன்,எ.வ வேலு, கே.என் நேரு, முத்துசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தோழமைக் கட்சிகளுடன் தேர்தல் குறித்து நேரில் சந்தித்து கலந்த பேசினோம். காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அந்த தொகுதியில் நின்றதால் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதியை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்பதற்காக முதல்வரை சந்தித்தோம். ஆனால் அவர்கள் ஏற்கனவே அறிக்கையை தயார் செய்து வைத்திருந்தனர். மற்ற கட்சியினருடனும் அவர்களே பேசி வைத்திருந்தனர். பேச்சுவார்த்தை சமூகமாக இருந்தது மகிழ்ச்சியுடன் நிறைவடைந்தது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடுகிறது. எங்கள் தோழமைக் கட்சிகள் இதற்கு முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளனர். இருப்பினும் நாங்களும் கூட்டணி கட்சிகளை சந்தித்து பேச இருக்கிறோம். வேட்பாளர் குறித்து கட்சியின் அகில இந்திய தலைமை முடிவெடுக்கும். இடைத்தேர்தல் நடைபெறும் மற்ற இடங்களுடன் சேர்த்து இதற்கான வேட்பாளரையும் அறிவிப்பார்கள். விரைவில் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும்” என தெரிவித்தார்.