புண்ணிய பூமியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி - பிரதமர் மோடிக்கு இளையராஜா நன்றி

 
ilayaraja

தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை காசி என்னும் புண்ணிய பூமியில் நடத்துவதற்கான ஆலோசனை பிரதமருக்கு எப்படி தோன்றியது என்று எண்ணி வியந்து மகிழ்கிறேன் என இசையமைப்பாளர் இளைஞராஜா கூறியுள்ளார். 

காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான பழமையான கலாச்சார தொடர்பினை மீண்டும் புதுப்பிக்கவும், கொண்டாடவும் காசி தமிழ்ச் சங்கம் விழா உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாரணாசியில் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மத்திய கலாச்சாரம், ஜவுளி, ரயில்வே, சுற்றுலா, உணவு பதப்படுத்துதல், தகவல் ஒளிபரப்பு ஆகிய அமைச்சகங்களும் உத்தரப்பிரதேச அரசும் இணைந்து செய்துள்ளன.   இன்று தொடங்கும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி அடுத்த மாதம் 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது .ஒரு மாதம் நடைபெறவிருக்கும் இந்த விழாவை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த ஒரு மாத நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை கச்சேரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.  நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, இசையமைப்பாளர் இளையராஜா, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் முருகன் உள்ளிட்டோர்கள் பங்கேற்றனர். மேலும் மாணவர்கள், ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், ஆன்மிகவாதிகள், வர்த்தகர்கள், தொழில்முனைவோர் உட்பட பல்வேறு பிரிவினர் பங்கேற்றனர்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வேட்டி சட்டை அணிந்து பங்கேற்றுள்ளார்.  

modi

இதனிடையே விழாவில் உரையாற்றிய இசையமைப்பாளர் இளையராஜா கூறியதாவது: காசிக்கும், தமிழகத்திற்கும் தொடர்பு அதிகம். பாரதியார் காசியில் 2 ஆண்டுகள் தங்கியுள்ளார்.பாரதியார் 9 -11ம் வகுப்பு காசியில் பயின்றது தமிழ் மக்களுக்கு பெருமை. பாரதியார் பாடலை பற்றி சுட்டிக்காட்டினார். முத்துசாமி தீட்சதர் பற்றி நினைவு கூர்ந்தார். இவர் மும்மூர்திகளுள் ஒருவர் ஆவர். தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை காசி என்னும் புண்ணிய பூமியில் நடத்துவதற்கான ஆலோசனை பிரதமருக்கு எப்படி தோன்றியது என்று எண்ணி வியந்து மகிழ்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 


இதனை தொடர்ந்து இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலரும் ரசித்து கேட்டனர்.