மாநிலங்களவை நியமன எம்.பியாக இளையராஜா பதவியேற்பு

 
ilayaraja

மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா இன்று, மாநிலங்களவை நியமன உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். 

இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் ராஜ்சபா நியமன உறுப்பினராக குடியரசு தலைவரால் தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரைக்கலைஞர்கள்  பலரும் வாழ்த்து தெரிவித்தனர். நியமன உறுப்பினர்களான பிடி உஷா உள்ளிட்ட பலரும் கடந்த வாரம் பதவியேற்றுக்கொண்ட நிலையில், இசைநிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றிருந்த இளையராஜா கடந்தவாரம் பதவியேற்றுக் கொள்ளவில்லை. இதனிடையே கடந்த வார இறுதியில் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த இளையராஜாவிற்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதனையடுத்து டெல்லி சென்ற இளையராஜா மாநிலங்களவையும் நியமன உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். மாநிலங்களவை சபாநாயகரும், துணை குடியரசு தலைவருமான வெங்கையா நாயுடு இளையராஜாவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்வில் இளையராஜா தமிழில் பேசி பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக பதவியேற்பதற்காக டெ ல்லி வந்த இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.