மாணவிகள் மது குடிப்பதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி எப்படி பொறுப்பேற்க முடியும்? கடும் வாதம்

 
sb

மாணவிகள் மது குடிப்பதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எப்படி பொறுப்பு ஏற்க முடியும் என்ற கேள்வியை  எழுப்பினார் மூத்த வழக்கறிஞர் எம். எஸ். கிருஷ்ணன்.

 தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார்,  சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதாகவும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.   இந்த மனுவை விசாரித்து உயர்நீதிமன்றம்  அவதூறு கருத்து தெரிவிப்பதற்கு நிர்மல் குமாருக்கு இடைக்கால தடை விதித்துள்ளது . 

இந்த நிலையில்,  இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது.   அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் எம். எஸ். கிருஷ்ணன்,  வழக்கறிஞர் ரிச்சர்ட் வில்சன் ஆகியோர் ஆஜரானார்கள் .

w

பொது வாழ்க்கைக்கு வந்த பின்னர் விமர்சனங்களை ஏற்கத்தானே வேண்டும் என்று நீதிபதி கேட்க,  தனிப்பட்ட முறையில் அவதூறு செய்வதற்கும் ஜனநாயக ரீதியில் விமர்சிப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது.   ஜனநாயக ரீதியில் எழும் விமர்சனத்தை ஏற்கலாம்.  ஆனால் நிர்மல் குமார் தனிப்பட்ட முறையில் அமைச்சரை அவதூறு செய்கிறார் என்று வாதிட்டார் வழக்கறிஞர் எம். எஸ். கிருஷ்ணன்.

 மாணவிகள் மது குடித்த வீடியோ காட்சியையும் , போதை நபர் ஒருவர் தகராறு செய்யும் காட்சிகளையும் வெளியிட்டு,  இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என்று சொல்கிறார் நிர்மல் குமார்.   தமிழகத்தில் மது விற்பனை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.  அப்படி இருக்கும் போது இந்த சம்பவங்களுக்கு அமைச்சர் எப்படி பொறுப்பு ஏற்க முடியும்? என்ற கேள்வியை எழுப்பினார்.

 அவர் மேலும் தனது வாதத்தில்,  அரசின் கொள்கை முடிவின்படி டாஸ்மாக் கடைகள் வாயிலாக மது விற்பனை நடந்து வருகிறது.  அதன் வருவாய் முழுவதும் அரசுக்கு செல்கிறது.   அப்படி இருக்கும்போது டாஸ்மாக் வருவாய் செந்தில் பாலாஜிக்கு செல்வது போன்று நிர்மல் குமார் அவதூறாக விமர்சனம் செய்திருக்கிறார் என்று குறிப்பிட்டார்.

 மேலும்,  பொன்னியின் செல்வன் படம் வசூல் இத்தனை கோடி தண்ணியின் செல்வன் வசூல் இத்தனை கோடி என்று டாஸ்மாக் விற்பனையை சுட்டிக் காட்டுகிறார் நிர்மல் குமார்.   நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த பின்னரும் கூட தொடர்ந்து அவதூறாக அவர் கருத்து தெரிவித்திருக்கிறார் என்று தனது வாதத்தை முன் வைத்தார்.

 நேற்றைய வாதம் இவ்வாறு முடிந்திருந்த நிலையில் இன்றைக்கும் வழக்கறிஞரின் வாதம் தொடர்கிறது.