7 வயது சிறுமிக்கு மது போதையில் பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமையாசிரியர்

 
rape

நாகை அருகே 7 வயது சிறுமிக்கு மது போதையில்  பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டார்.

Sexual Assault Is More Than Rape

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள  வலிவலம் ஊராட்சி காருகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 6 மாணவிகள் மற்றும்   2  மாணவர்கள் என 8 குழந்தைகள் மட்டுமே படித்து வருகின்றனர். இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே கொண்ட பள்ளியில்  வேதாரண்யம் அடுத்துள்ள தகட்டூரை சேர்ந்த தமிழ்செல்வன்(58) பள்ளி தலைமையாசிரியராகவும், ஆசிரியராக தேவகி(47) என்பவரும் பணியாற்றி வருகின்றனர்‌. 

இந்நிலையில் மது போதையில் பள்ளி வந்த  தலைமையாசிரியர்    அப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு  பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து வீட்டில் தெரிவித்தால் குளத்தில் தள்ளி கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் பெற்றோர்களிடம் சொல்லத் தயங்கிய சிறுமி பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இது குறித்து தனது மகளிடம் தாயார் நடந்தவற்றை  விசாரித்ததில் பள்ளித் தலைமையாசிரியர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் நாகை மாவட்ட குழந்தைகள் சேவை அமைப்பு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் நேரடியாக சிறுமியின் இல்லத்திற்கு சென்று விசாரணை செய்து சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று பாலியல் தொந்தரவு நடந்துள்ளது என்பதை உறுதி படுத்தினர்.  
அதனைத் தொடர்ந்து இதுதொடர்பாக நாகை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  தலைமையாசிரியரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து கீழ்வேளூர் வட்டார கல்வி அலுவலர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு  கொடுத்த தலைமையாசிரியர் தமிழ்செல்வன்  மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளார். மேலும் அப்பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் தேவகியை வேறு  பள்ளிக்கு பணி மாறுதல் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.