கள்ளக்குறிச்சி பள்ளியில் 5- 8 வரையிலான வகுப்புகளைத் தொடங்க உயர்நீதிமன்றம் அனுமதி

 
kallakurichi

பள்ளி மாணவி மரணத்தை அடுத்து மூடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியில்  5முதல் 8ம் வகுப்பு வரை கூடுதலாக திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

Highcourt

கள்ளக்குறிச்சியில் உள்ள சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்த மாணவி மரணமடைந்ததை அடுத்து, கடந்த ஜூலை 17ஆம் தேதி பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளி உடைமைகளை அடித்து நொறுக்கி கலவரத்தில் ஈடுபட்டனர்.பள்ளியை தீ வைத்தும் சூறையாடினர்.  இதனை அடுத்து பள்ளி மூடப்பட்டது. பள்ளியை திறக்கக்கோரி தாளாளர் தாக்கல் செய்த மனுவை  ஏற்கனவே விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், டிசம்பர் 5ம் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளியை திறக்க அனுமதியளித்தது. 

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, பள்ளிக்கு வரும் மாணவர்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பள்ளி நிர்வாகத்திற்கு  நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.  இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி  கார்த்திகேயன் முன்பு  விசாரணைக்கு வந்த போது பள்ளி நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிரந்தரமாக இரண்டு உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  நிலைமை சீராக உள்ளதாகவும், உதவி ஆய்வாளர் தலைமையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஐந்து முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளியை திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும் மற்ற வகுப்புக்கு திறப்பது குறித்து பின்னர் முடிவு செய்யலாம் எனக்கூறிய நீதிபதி வழக்கு விசாரணையை ஆறு வாரத்திற்கு ஒத்திவைத்தார். இதனிடையே பள்ளி வளாகத்திற்குள் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர், காவல்துறை சீருடையில் இல்லாமல் சாதாரண உடையில் இருக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.