தமிழகத்தில் அதிமுக மீண்டும் எப்போது ஆட்சிக்கு வரும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு - ஈபிஎஸ்

 
ep

கடந்த 14 மாத கால திமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்பட வில்லை என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறை கூறியிருக்கிறார்.

OPS In League With DMK: New AIADMK Boss EPS After Rival Expelled
 
அதிமுகவின்  இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட  பிறகு எடப்பாடி பழனிசாமி, அவருடைய சொந்த மாவட்டமான சேலத்திற்கு இன்று வருகை தந்தார். சேலம் மாவட்ட எல்லையான தலைவாசல் மற்றும் மாநகரில்  திருவாக்கவுண்டனூர் ஆகிய இடங்களில் அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர். 

வரவேற்பினைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், “திமுக அரசு ஆட்சிக்கு வந்தபிறகு புதிய திட்டங்கள் எதையும் கொண்டுவரவில்லை. முந்தைய அதிமுக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களையே முதலமைச்சர் திறந்து வைத்து வருகிறார். இன்னும் ஒரு வருட காலத்திற்கு அதிமுக அரசு திட்டங்களையே திறந்து வைக்க முடியும். அவ்வளவு அதிகமான திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றியது. புதிய மாவட்டங்கள், மருத்துவக் கல்லூரிகள் ஆகியவை அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டன. 

ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ-மாணவியர் மருத்துவராகும் வாய்ப்பினை 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் அதிமுக மீண்டும் எப்போது ஆட்சிக்கு வரும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். எப்போது தேர்தல் நடத்தினாலும் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும். அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தையும் அரசே ஏற்கும் என அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது எந்த திட்டத்தை அறிவித்தாலும் அதற்காக ஒரு குழு அமைத்து விடுகிறது. திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட 37 குழுக்களால் ஏதும் பயனில்லாத நிலையில் உள்ளது. திறமையற்ற முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார். அதனால் எதையும் செயல்படுத்த முடியவில்லை. அதிமுக ஆட்சியில் சிறந்த செயல்பாட்டிற்காக மத்திய அரசின் விருதுகளை பல்வேறு துறைகள் பெற்றன.தற்போது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிக அளவில் நிகழ்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.
 
போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. பலமுறை எடுத்துக் கூறியும் உரிய நடவடிக்கை இல்லாததால்  போதைப் பொருள் புழக்கம் அதிக அளவில் உள்ளது. அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் அவர்களே வீழ்ந்து போவார்கள். அதிமுக சொந்த உழைப்பால் தான் நிலைத்து நிற்கிறது . எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழிநடத்திய கட்சிக்கு சேலத்தை சேர்ந்த எனக்கு இடைக்கால பொதுச் செயலாளர் வாய்ப்பினை பொதுக்குழு உறுப்பினர்கள் வாய்ப்பு அளித்துள்ளனர். மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய துணை நிற்க வேண்டம்” என்றார்..