தமிழகத்தை அமைதி பூமியாக வாழ விடுங்கள்... ஆளுநருக்கு இயக்குநர் அமீர் கடிதம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு ஆபத்தான அமைப்பு என்றும் அது பயங்கரவாத அமைப்பு என்றும் கூறி இருந்தார்.
இதனை கண்டித்திருந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர், ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே கூடிய அவ்வமைப்பை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், ஆளுநர் ஆர்.என் ரவியை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தின் போது பேசிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் முகமது ஷேக் அன்சாரி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, ஆதாரம் இல்லாமல் பேசி, அவதூறுகளை அள்ளி எறிந்துள்ளதாக கூறினார்.
இந்நிலையில் ஆளுநரோ, அரசியல் தலைமைகளோ வெறுப்புணர்வை விதைக்கும் பேச்சுகளை கைவிட்டு, தமிழகத்தை அமைதிப் பூமியாக வாழவிடுங்கள் என்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் அதிகாரத்திற்கு வருபவர்கள், மக்களுக்கு எதிராகவே செயல்படுவது வேதனைக்குரியது என்றும் இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்றைக்கும் வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராக களத்தில் நின்று வலுவாக போடாக்கூடிய அமைப்பு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப். கடந்த சில நாட்களாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் அமைப்பு குறித்து ஓரு ஆடியோவை வெளியிட்டார். அந்த ஆடியோவிலும் ஆளுநர் ரவியின் கருத்தையே குறிப்பிட்டிருந்தார். அவர் ஏற்கனவே காவல்துறை அதிகாரியாக பணியாற்றிவர். எனவே எதைச் செய்தால் எது நடக்கும் என்பது அவருக்கு தெளிவாக தெரியும். அதனால்தான் திட்டமிட்டு தான் பேசிய ஆடியோவை அவரே ரகசியமாக கசிவ்யவிட்டார். அதன்மூலம் விஷ விதையை தமிழகத்தில் விதத்திருக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.